Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

சிறுகதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

மௌனத்தின் எல்லையிலே

வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் கணவனின் குறட்டை ஒலி வேறு அவளுக்கு இடையூறாக இருந்தது. தன் வீட்டை நினைந்து பார்த்தாள். ஒவ்வொரு நாளும் தவறாமல் மாலை கட்டிக்கொண்டுபோய்ப் போட்ட பிள்ளையாரை நினைத்தாள். கடவுளே இது உனக்கே ஞாயமா? உன்னைக் கையெடுத்துக் கும்பிட விடாமல் இப்படித் தவிக்க விட்டு விட்டாயே என்று மனத்திற்குள் பலவற்றையும் நினைந்து நினைந்து வருந்திக் கொண்டிருந்தவளை நீண்ட நேரத்தின் பின் நித்திராதேவி மெல்லென அணைத்துக் கொண்டாள்.

குடியிருந்த வீட்டை விட்டு இரவோடிரவாக கையில் அகப்பட்டதைத் தூக்கிக்கொண்டு ஓடியவர்களின் பட்டியலில் இவர்களும் அடங்குவர். உறவினரோ ஒவ்வொரு திக்காகப் போய்விட்டனர். க்ஷெல்லடியில் தந்தையையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்துவிட்டாள். அவர்களுடைய இழப்பைத் தாங்காமல் பல நாட்களாக மனத்துள்ளே வெதும்பி நொந்து நொந்து நெக்குருகிக் கொண்டிருந்தாள். இது போன்ற பல சம்பவங்களை அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்ததால் அவள் நெஞ்சமும் கல்லாகிப் போனது போன்ற நிலையிலே தானிருந்தாள். அவள் மனதிலே ஏதோ ஓர் உண்மை புலனாகியது. அந்த உண்மை அடிக்கடி அவளை எப்போ எங்களுக்கும் அக்கதி என்று ஏங்க வைப்பது போலிருந்தது. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போன்ற பிரமைதான் தோன்றியது. அவளின் தங்கை ரேணு கனடாவில் இருந்து அனுப்பும் காசு தான் அவர்களுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

கனடாவில் ரேணு படும் கஸ்டங்கள் அவர்களுக்குப் புரிந்திருக்க ஞாயமில்லை. காரணம் அவள் தன் கஸ்டங்கள் எதையுமே அவர்களுக்கு எழுதுவதில்லை. ரேணு சாதாரணமான ஒரு தொழிற்சாலை வேலைதான் செய்கின்றாள். ஒரு வீட்டிலே வாடகைக்கு ஒரு அறை எடுத்து மிக எளிமையாகவே வாழ்கின்றாள். எவ்வளவு செலவுகளைத் தன்னால் கட்டுப் படுத்த முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கின்றாள். தன்னைத் திருமணம் செய்யவென்று கனடாவிற்கு அழைத்த தன் கணவராகப் போறவரிடம் தன் குடும்பம் எப்போ சந்தோக்ஷமாக பழைய இடங்களிலே போய் இருப்பினமோ அதன் பின் நம் திருமணத்தை வைத்துக் கொள்வோம் என்று சம்மதம் கேட்டாள். ஆனால் நாளாக நாளாக அவரின் போக்குகளை அவதானித்தவள் அவரிற்கு ஏற்கனவே இங்கு குடும்பம் இருப்பதை அறிந்தாள். தாங்கொணாத் துயருற்றாள். ஈற்றில் தெளிந்தவளாக தன் குடும்பத்திற்கு உதவுவதே தன் நோக்கமாக உழைத்து வந்தாள். இருந்தபோதும் அவளால் மிச்சம் பிடிப்பது மிகவும் கடினமாகவேயிருந்தது. ஏதோ தன்னாலியன்றதை அந்த அகதிக் குடும்பத்திற்குச் செய்தே வருகின்றாள். இம்முறை தொழிற்சாலையில் அடிக்கடி லீவுகள் தந்தமையால் அவளால் நேரத்திற்குப் பணம் அனுப்ப முடியாமல் போய்விட்டது. அவர்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்துக் கவலைப்பட்டாள்.

முதற் கோழி கூவிய சத்தம் கேட்டு எழுந்த சுந்தரம் இங்கேருமப்பா சரசு எழும்பல்லியே கோழியெல்லே கூவிட்டுது. நேரத்துக்குப் போனால் தானே ஏதும்.. என்று இழுத்தவர் என்ன நினைத்தாரோ நான் போகட்டே என்று கேட்டார். கணவரின் குரல் கேட்ட சரசு சடக்கென எழுந்தாள். அடுப்பிற்குள்ளிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து வாய்க்குள் போட்டுச் சப்பினாள். பின் தன் கை விரலினால் பற்களை நன்கு அவசர அவசரமாகத் தேய்த்தாள். ஒரு செம்பு தண்ணீரை எடுத்து அதில் வாய் கொப்பளித்து முகத்தையும் கழுவினாள். தன் சேலைத் தலைப்பிலேயே முகத்தையும் துடைத்தவள் தன் தலையை விரித்து கைகளினால் கோதியபின் ஒருமுறை தன் கூந்தலை உதறிவிட்டு மீண்டும் தன் கூந்தலை அள்ளி முடிந்தாள். வீட்டிற்குள் உடைகள் போடவெனக் கட்டப்பட்டிருந்த கயிற்றிலிருந்த ஒரு சேலையை எடுத்து தன் தலை, கைகள் யாவற்றையும் ழூடியபடி தன் இடுப்பிலிருந்த காசு முடிச்சையும் ஒரு முறை தடவிப் பார்த்தபடி விரைந்து நடையைக் கட்டினாள். மார்கழிப் பனியால் இலைகள் நனைந்திருந்தன. அவற்றிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர்த் துளிகள் விழுந்தன. அவை ஒருவிதமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன. முன்னர் சிறுமியாக இருக்கும் போது அவளுக்கு இந்த பனித்துளிகள் இலையின் விளிம்புகளிலே வந்து விழ ஆயத்தமாக இருப்பதும் மரங்களின் கீழே யாராவது வந்தால் அந்த மரங்களை ஆட்டிவிட அதிலிருந்து விழுந்த அந்தப் பனித் துளிகளில் நனைந்து கூச்சலிட்ட பொழுதுகள் புல் நுனிகளிலே தேங்கி நிற்கும் முத்துப் போன்ற பனித்துளிகளை அவள் ரசித்த பொழுதுகள் ஏராளம். ஆனால் இன்று அவை பற்றிய நினைவுகளே இல்லாமல் ஓட்டமும் நடையுமாக விரைகின்றாள். தானும் ஒரு றாத்தல் பாண் வாங்கி விட வேண்டும் என்ற உந்துதலால்.

ஏற்கனவே நீண்டிருந்த வரிசையில் போய் நின்று கொண்டாள். அருகில் நின்றவர்களோ அறிமுகமற்றவர்கள். எனவே மெளனமாக நின்றாள். இருந்தும் அவள் மனமோ தன் முன்னால் நிற்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்குப் பார்த்தது. பின் தான் மிகத் தொலைவில் இல்லை என்ற மன ஆறுதலுடன் நின்றுகொண்டு அருகில் நிற்பவர்களின் கதைகளையும் காதில் விழுத்திக் கொண்டாள்.

வீட்டிற்குத் திரும்பி வரும்போது பொழுது பொல பொலவெனப் புலர்ந்திருந்தது. கதிரவனோ தன் பொற் கிரகணங்களைத் தன்னிச்சையாக நாற்றிசையும் பரவியிருந்தான். மரங்களில் இருந்த பனித் துளிகள் அவன் வெம்மை தாங்காது நிலத்திலே சொட்டுப் போட்டுக் கொண்டிருந்தன. இலைகளினுர்டாக கதிரொளி கீறல்களாக விழுந்து கொண்டிருந்தது.

அடுப்பிலே தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது, காலைத் தேனீருக்காக. ஏனப்பா இப்ப அடுப்பை மூட்டினீர்கள். கொஞ்சம் பொறுத்தெண்டா அந்தச் சூட்டோ டையே பகல் சமையலையும் முடித்திருக்கலாமெல்லே. இன்னொருக்கால் தீக்குச்சு விறகு வீணாகி விடுமே என்ற அங்கலாய்ப்பு அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது. வெறுந்தேனீரை ஊற்றி ஒவ்வொருவருவருடைய உள்ளங்கைகளிலும் கரண்டியின் நுனியால் சிறிது சீனியையும் வைத்தாள். பாணை ஐந்து சம அளவு துண்டுகளாக வெட்டினார் சுந்தரம். ஆவலுடன் அவற்றை பிள்ளைகள் இருவரும் பெற்றுக் கொண்டனர். வெறுந் தேநீரிலே தோய்த்து அவற்றைச் சாப்பிட்டனர். சரசுவின் அம்மா பாக்கியமோ ரேணுவை வைதபடியே இருந்தார். அவளின்ர கடிதம் வந்து இப்ப எவ்வளவு நாளாகுது. அவளுக்கு நாங்கள் படும் கஸ்டங்கள் தெரிந்திருந்தும் இப்படி நடக்கிறாளே என்றார். அவர் வார்த்தைகளிலே இன்றாவது ரேணுவின் பணம் வராதா என்ற ஆதங்கம் தொனித்தது.

அடுப்பிலே சிறிதளவு அரிசியைப் போட்டு உப்புக் கஞ்சி காச்சி நாவிலே பூச என்று உறைப்பாக வெறும் மிளகாயை அரைத்து உப்பும் புளியும் சேர்த்தாள். தன் வேலைகள முடிந்துவிட்டதால் தன் தாயாருடன் திண்ணையில் வந்து அமர்ந்தாள் சரசு. அவளின் உள் மனமும் ரேணுவின் கடிதத்திற்காய் ஏங்கியது.

நானொருக்கால் உதில போட்டு வாறன் என்றுவிட்டு ரேணுவின் கடிதம் வந்திராதா என்ற ஆவல் மேலிட கடிதம் பார்க்கப் புறப்பட்டுப் போனார் சுந்தரம்.

நினைவலைகள் நீண்டங்கே
நெடுமூச்சுக்கள் வந்தன
கவலைகள் சூழ்ந்தங்கே
கண்ணீர் மழை பொழிந்தன
வெதும்பிய நெஞ்சமதில்
விம்மல்கள் வெடித்தன
வார்த்தைகள் வர மறுத்ததால்
மெளனமே சூழ்ந்ததங்கு.

முற்றும்.