Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

சிறுகதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

நீர்க்குமிழி

திண்ணையிலே குந்தியிருந்துகொண்டு முழங்கால்கள் இரண்டையும் தன்னிரு கரங்களினாலும் இறுகக் கட்டிப் பிடித்தபடி முகத்தை அக்கரங்களுக்குள் புதைத்தவளாக சிந்தனைச் சிறகுகளை அகல விரித்துப் பறந்துகொண்டிருந்தாள் மீனா.
மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. பளிச்சிடும் மின்னல்கள் காது செவிடுபடும் இடிமுழக்கம் முறிந்துவிழுகின்ற மரக்கிளைகள் இவை எதுவுமேஅவளை அசைத்துவிடுவதாக இல்லை. ஆனால்… ஆனால் வீட்டுக்கூரையிலேயிருந்து வடிந்துகொண்டிருந்த நீர்ஏற்படுத்திய அந்த நீர்க்குமிழிகள் அவள் இதயத்தைத் தொட்டு அவளுக்கு ஏதேதோ சொல்லத்துடிப்து போலிருந்தது. கண் கொட்டாமல் அவற்றை உற்றுப்பார்த்தபடியே தன் கால்களை மீண்டும் ஒருமுறை இறுகக் கட்டிப்பிடித்தாள். ஓ எவ்வளவு அழகாக இருக்கின்றன என எண்ணுமுன்னமே அவை உடைந்து இருந்த இடமே தெரியாமல் போய்விடுகின்றனவே. மீண்டும் மீண்டும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டேயிருந்தன. இதை உற்று நோக்கிய அவளின் உள்ளம் கனக்கத் தொடங்கியது. கண்களில் இருந்து மடைதிறந்த வெளளம் போல் கண்ணீர் வடியத் தெடங்கியது.

மீனா சாதாரண குடும்பத்திலே பிறந்தவள்தான் பெரிய அழகி என்று பெயர் வாங்காவிட்டாலும் கூட அழகானவள்தான். முழங்கால்வரை நீண்ட அழகிய நெளிந்த கருங்கூந்தல் மாலைச் செவ்வானத்தின் பொன்மஞ்சள் மேனி அமைதியான சுபாவம் யார்மேலும் இரக்கங்கொள்ளும் தன்மை இவையெல்லாம் அவளுடன் கூடப் பிறந்தவையென்றால் அது மிகையாகாது. படிப்பிலும் அவளுக்கிணையாக யாருமே இருக்கமுடியாது என்பதுபோல் எப்போதுமே முதலாமிடத்தைத் தானே தட்டிக்கொண்டிருந்தாள். தோழியென்று சொல்லிக்கொள்ளக்கூட யாரும் அவளுக்கில்லை. அம்மா அப்பா படிப்பு இவை தான் அவள் உலகம்.

பத்தாம் வகுப்புப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. மீனா தான் பாடசாலையிலேயே நல்ல முடிவு எடுத்திருந்தாள். பின் மீனா ஓரு கலவன் பாடசாலையிலே தன் படிப்பைத் தொடர நேரிட்டது. எப்போதும் போலவே ஆசிரியரின் மேசைக்கு முன்னால் இடம் கிடைத்த திருப்தியில் இருந்தாள். எல்லோரும் வெவ்வேறு பாடசாலையில் இருந்து வந்ததினால் அறிமுகம் இருக்கவில்லை. ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் மறுபுறமுமாக இருந்தனர். ஆசிரியர்கள் வருவார்கள் பாடங்களின் தலைப்புகள் எல்லாம் சொல்வார்கள். ஏதேதோ அவசரஅவசரமாக விளங்கப் படுத்துவாகள். விளங்குவது போலிருக்கும் விளங்காது. பரீட்சை என்றாலே குறைவான மதிப்பெண்களையே அவளால் பெற முடிந்தது. இது அவளுக்குப் பெரிய கவலையாகவே இருந்தது. ஆனால் ரமேஸோ அதிகளவு மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டேயிருந்தான். முதன் முறை பரீட்சையின் போது ஆசிரியர் ரமேஸின் பெயரைச் சொன்ன போது அனைவருமே ஓர் முறை திரும்பிப் பார்க்கத் தவறவில்லை. மீனாவின் மனத்தில் கூட ஓர் உயர்வான இடத்தை அவன் பிடித்துவிட்டான். பின் அவார்களது வகுப்பறை மாற்றப்பட்டது. கடைசி வரிசையில் அதுவும் ரமேஸிற்கு அருகிலேயே இடம் கிடைத்தது.

ரமேஸ் நல்ல உயரம். கம்பீரமான தோற்றம். யாரையும் கவரும் மெளனமான புன்னகை. தானும் தன்பாடும். ஆசிரியர் படிப்பிக்கும் போது மீனா அவசர அவசரமாக அவரின் வாயிலிருந்து வரும் யாவற்றையும் எழுதித் தள்ளுவாள். ஆனால் ரமேஸோ ஏதாவது கீறியபடியே இருப்பான். ஒரே ஒரு கொப்பியை சுருட்டிக் கொண்டுதான் பாடசாலை வருவான். அதில்தான் எல்லாப் பாடங்களுமே இருக்கும் பாடங்களை விட படங்கள் என்றே சொல்லலாம். மீனாவுக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு கெட்டிக்காரன் ஆசிரியார் படிப்பிப்பதை கேட்பது மட்டும்தான் அவன் வேலை. எந்தக் கேள்வி கேட்டாலும் அவன் தான் பூரணமான திருப்தியான பதிலளிப்பான். ரமேஸ் மீது வைத்திருந்த அபிமானம் நாளுக்கு நாள் அவளை அறியாமலே அவளுள் வளர ஆரம்பித்தது. சில ஆண்களும் பெண்களும் சண்டை பிடிப்பார்கள். நாளடைவில் வகுப்பிலே எல்லோருமே சகஜமாகப் பழக ஆரம்பித்து விட்டனார். பலர் காதலர்களாகக் கூட மாறிவிட்டனர்.

நீண்ட நாட்களாகவே மீனா ரமேஸிடம் கேட்க வேண்டும் என சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்தாள். அன்று அதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. சிறிது தயங்கியவள் பின் கேட்டேவிட்டாள். உங்களால் எப்படி இப்படிப் படிக்க முடிகின்றது? அதற்கு ஒரு மெல்லிய சிரிப்பே பதிலாகக் கிடைத்தது. கெட்டிக்காரன் மட்டுமா? எவ்வளவு அழகானவனும் கூட என்று தன்னையே மறந்த நிலையில் அவனைப் பர்த்தபடியே நின்றிருந்தாள். ”என்ன நான் ஏதோ கதைக்கிறன் நீர் பலமான யோசனை போல கிடக்கு” என்று சொல்ல ”ஓ அது ஒன்றுமில்லை ” என்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டவள் ”எனக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லித் தாங்கோவன்.” என்றாள். தான் படிக்கும் டியுட்டரி ஆசிரியர் பெயர் முதலிய விபரங்கள் அனைத்தையுமே கூறினான். பின் அவர்கள் டியுட்டரியிலும் ஒன்றாகவே படிக்க ஆரம்பித்தனர். தன்னாலும் ரமேஸிற்கு ஈடாக படிக்க இயலும் என நிரூபிக்க முயன்றாள் மீனா. ஆனால் சிறிதளவேனும் பின்னால் தான் நின்றாள். ஆனால் ரமேஸிற்கு முதலிடம் கிடைப்பதில் அவளுக்கு ஒருவித திருப்தி இருக்கத்தான் செய்தது. அது ஏன் என்று விளங்காத புதிராகவே இருந்தது. ரமேசும் அவள் முன்னேற்றத்தைக் கண்டு வியந்தான். மீனாவின் கொப்பிகளை வாங்கிப் படிப்பான். ‘”உங்களைப் போலவே அழகான எழுத்துக்கள்”” என்று பாராட்டுவான்.

ஒரு நாள் ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தா. ரமேஸ் வழமை போல படம் கீறியபடி இருந்தான்.அவனுடைய படங்களை ரசிப்பதில் அலாதிப் பிரியம் மீனாவிற்கு. வழமை போல ஆசிரியர் போனதும் முதல் வேலையாக அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தாள். அது ஒரு பெண்ணின் படம். அப் பெண்ணின் நீண்ட கூந்தல் நெற்றியிலே உள்ள சுருள் யாவும் தன்னை ஒத்திருப்பதை உணர்ந்தாள் மீனா. அவனை மெல்லப் பார்த்தாள்.” ”என்ன பார்க்கிறீங்கள்? இது யார் தெரியுமா? ” என்றான். அவளுடைய இதயம் பலமாக அடிக்கத் தொடங்கிவிட்டது. நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. தொண்டைக்குழிக்குள் ஏதோ வந்து இறுக்குவது போலிருந்தது. அவள் ”தெரியாது” என்று மெல்லத் தலையசைத்தாள். ”இவள்தான் என் நெஞ்சிலே குடியிருப்பவள்.உமக்கு இவளைத் தெரியாது.” யார் அந்தப் பாக்கியசாலி என்று கேட்க அவள் மனம் துடித்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள். அதன் பின் அவனைப் பார்க்கவே ஏதோபோலிருந்தது அவளுக்கு. ”ஒருநாளைக்கு உங்களுக்குக் காட்டுகிறேனே” என்று புதிராக பதில் சொன்னான். அவள் ஒன்றுமே கதைக்காமல் கொப்பியைக் கொடுத்துவிட்டாள் கைகள் குளிர்ந்துபோயின. அவன் முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. யார் அவள் என்று கேட்கவேண்டும் போலிருந்தது.அவளாள் அவனுடன் முன்புபோல் கலகலப்பாக பழக முடியவில்லை. பரீட்சையும் நெருங்கியதால் இருவருக்கும் வேறுவிடயங்கள் பற்றிக் கதைக்க நேரம் கிடைப்பதும் அரிதாகவே இருந்தது.

பரீட்சை முடிவுகளும் வெளியாகின. இருவரும் ஒரேவிதமாகவே சித்தியடைந்திருந்தனர். நீண்ட நாட்களின் பின் இருவரும் சந்தித்துககொணடனர். மீனாவால் அவனிடம் கதைக்க முடியாமலிருந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரிடையேயும் பெரிய மெளனம் நிலவியது. ரமேஸ்தான் முதலில் பேசினான். ‘இனி என்ன கம்பசில சந்திப்போம் தானே.’ எங்கே உம்மை இன்று சந்திக்காமலே போய் விடுவேனோ என்றிருந்தேன். நல்லகாலம் வந்திட்டீர். என்று கதைகளை அளந்துகொண்டே போனான். அவனுடைய கதைகள் மனதுக்கு இதமாக இருந்தது. அப்படியே தன்னையே மறந்து கேட்டுக் கொண்டேயிருந்தாள். இன்னுமொரு காதலி இருக்கும் போது நாம் வீணாக கற்பனை பண்ணக் கூடாது என்று பலவாறு குழம்பித் தத்தளித்தாள். ஒரு ஆண் பெண்ணுடன் பழகினால் இப்படித் தப்புக்கணக்கு போடலாமா? என்று தனக்குள் பல கேள்விகளைக் கேட்டு விடைகாணத் தவித்துக்கொண்டிருந்த மீனாவை ‘என்ன நான் ஏதும் தப்பாகக் கதைத்துவிட்டேனா’ என்று மெதுவாக தழைந்த குரலிலே கேட்டான்.அந்தக் குரல் அவளுக்குள் ஊடுருவி அவளுயிரைத் தொடுவது போலிருந்தது. ‘உங்கள் காதலி எப்படியிருக்கிறாள்?” என்றுகேட்கவேண்டும் போல நா துடித்தது. ஆனால் ஒருவாறு அடக்கிக்கொண்டாள். ஏன் நான் அவள் மீது கோபப்படுகின்றேன்? அவள் யாரோ நான் யாரோ?என்று எண்ணியபடியே வலிந்து ஒரு புன்னகையை வரவழைத்தபடி சரி நேரம் போகுது அம்மா அப்பாவிற்குத் தெரியாது.என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கும் காத்திராமல் வந்துவிட்டாள். ரமேசின் நினைவுகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன.

பல்கலைக்கழகத்திலும் ஒன்றாகவே படிக்கச் சந்தர்ப்பங் கிடைத்தது. ரமேஸின் தாயார் இறந்ததினால் மிகுந்த கவலையுடன் காணப்பட்ட அவனைப் பார்க்கவே மிகுந்த சங்கடமாக இருந்தது. மீனாவே அவனுக்கும் சாப்பாடு கொண்டு போவாள். இப்படியே அவர்கள் நட்பு நாளாக ஆக கூடிக்கொண்டே போயிற்று.

ஒரு நாள் மீனாவின் அம்மா பிள்ளை மீனா இங்க ஒருக்கால் வா உன்னோட கொஞ்சம் கதைக்க வேண்டும் என்றார். மீனாவிற்கு தூக்கிவாரிப் போட்டது. ரமேஸ் பற்றி ஏதாவது கேள்விப் பட்டு விட்டாவோ என்று மனதிற்குள் பயந்தபடியே மெதுவாகப் போனாள். அவளது தாயார் சுளகிலேயிருந்த அரிசியிலே நெல்லுப் பொறுகிகியபடியே பிள்ள இன்றைக்கு புரோக்கர் சின்னத்தம்பி வந்தது. அம்மா புரோக்கார் என்றதுமே அவளுக்கு விளங்கிவிட்டது. ஆனால் எப்படி அம்மாவிடம் இது பற்றிக் கதைப்பது என்று நிலைதடுமாறிப் போனாள். அமமா தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார். பெடியன் பல்கழைக்கழகத்தில் தான் படிக்குதாம் நல்ல குணமாம் ஒரே பிள்ளையாம் உன்னைப்போலத்தான். அப்பா உன் முடிவு தெரியாமல் முடிவு சொல்லப் போவதில்லை எனறு சொல்லிப் போட்டார். மற்றது தாய் கிட்டடியிலதானாம் செத்தது’ என்று அடுக்கிக் கொண்டே போனார். அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளுடைய காதுகளில் அம்மா சொல்வது எதுவுமே விழவில்லை. ‘பிள்ளை உனக்கு பல்கலைக்கழகமும் முடியப் போகுது தானே. புரோக்கர் சின்னத்தம்பி குறிப்பு தந்துபோட்டுத் தான் போகுது. அப்பாவிற்கும் பெடியனைப் பிடித்துக் கொண்டுது. அம்மாவிடம் சொன்னால் அம்மா ரமேஸ் வீட்டாரிடம் கதைப்பா தான் ஆனால் எப்படி நான் சொல்வது? என்று மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. சாப்பிடவும் மனம் வரவில்லை. எப்படியும் நாளை இதுபற்றி ரமேஸிடம் சொல்ல வேண்டும் என்று துடித்தாள்.

மறுநாள் அவள் தன் கலியாண விடயம் பற்றி சொன்ன போது ‘என்ன பதில் சொன்னீர்?” என்று மிக ஆவலாகக் கேட்டான். யார் புரோக்கர் என்பதையும் கேட்கத் தவறவில்லை. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் அழுவதைப் பார்த்த ரமேஸின் முகம் மாறிவிட்டது. ‘சரி ஏன் இப்ப அழுகிறீர்? நீர் யாரையாவது விரும்புகிறீரா?’ என்று பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். ‘நான் நினைத்தது பிழையாக இருந்தால் என்னை மன்னித்துவிடும் நான் என்று உம்மைப் பார்த்தேனோ அன்றே உம்மை என் மனதில் நேசிக்கத் தொடங்கிவிட்டேன. அதனால் தான் என் அப்பாமூலமாக முறையாக பெண் கேட்டு புரோக்கரை அனுப்பினேன். நான் செய்தது பிழையா?” என்று மிகுந்த வருத்தத்துடன் கேட்டான். அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ”எனக்கு இது போதும்.” ஏன் என்னிடம் இதுபற்றிக் கூறவில்லை? நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்” என்று சொன்னவுடன் அவன் முகத்திலே ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவளுள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.

இருவருக்கும் திருமணம் எண்ணம் போல் நிறைவேறியது. வேலை தேடுவதும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. இல்லறமெனும் நல்லறத்தில் வாழ்ந்ததன் பயனாக பெயார் சொல்ல ஒரு பிள்ளையும் பிறந்தான்.”’என் பிள்ளைக்கு நிறைய சகோதரர்கள் வேண்டும் இல்லையென்றால் அவனும் எங்களைப் போலத் தனித்துவிடுவான்.” என்று அடிக்கடி சொல்லும் அவனுடைய ஆசைக்கனவுகளை அவள் நிறைவேற்றத் தயாராகவேயிருந்தாள. மீனா வேலையால் நோரத்திற்கே வந்துவிடுவாள். மிகுந்த சந்தோசமாக அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. ரமேசின் அன்பிலே அவள் தன்னையே மறந்து விடுவாள். ரமேசும் தன் தாயை மீனாவாகக் கண்டான். ஆனால் அவர்கள் வாழ்க்கையிலே அந்த சந்தோசம் நீடிக்க முடியாத நிலை ஏற்படடுவிட்டது. இது தான் விதி என்பதா.

அன்றும் இதேபோலவே மழை விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. மீனா வழமைபோலவே நேரத்திற்கே வீடு வந்து விட்டிருந்தாள். ஆனால் நீண்ட நேரமாகியும் ரமேஸ் வீடு திரும்பவில்லை. வாசலிலே அவனுடைய வரவிற்காகக் காத்திருந்த அவளை அந்தக் கார்ச் சத்தம் சிறிது பரபரப்படையச் செய்தது. காரிலிருந்து ஒருவர் மிகுந்த பரபரப்புடன் ஓடி வந்தார். அது ரமேசுடன் வேலை செய்பவர்தான். மீனா அவரை உள்ளே வரும்படி அழைத்தாள். ஆனால் அவரின் முகத்திலே பெரிய கலவரம் இருப்பதை உணர்ந்தாள். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர்பொல பொல என்று கொட்டியது. மீனாவின் உடல் பதற ஆரம்பித்தது. மயக்கம் வருவது போல இருந்தது. மெதுவாக கதவு நிலையை பிடித்துக் கொண்டாள். ஆய்வுகூடத்திலே ஏதோ வெடித்து பலத்தகாயங்களுடன் ஆஸ்பத்திரியிலே சேர்த்திருப்பதாக அவர் கூறி முடிக்கு முன்பே அவள் அவருடன் தன் ரமேஸைப் பார்க்கவென்று கிளம்பிவிட்டாள். அவள் வரவிற்காகவே காத்திருந்தவன் போலக் காத்திருந்து விட்டு அவள் கைகளைப் பற்றிப் பிடித்தபடியே தன் இறுதி மூச்சையும் விட்டான் .அவள் தலை சுழன்றது அப்படியே மயங்கிவிட்டாள். மயக்கத்திலே அவள் தன் ரமேசுடன் பேசுவது போலிருந்தது. சந்தோசமாக இருந்தது. அவள் முகத்திலே தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினார்கள். இப்படி எத்தனைதரம் மயங்கியிருப்பாள். எல்லாமே முடிந்துவிட்டன.

இப்போ அவளுக்கென்று இருப்பதெல்லாம் அவரின் மறு உருவம் போலுள்ள அவர் வாரிசுதான். அந்தக் குழந்தையும் இல்லையென்றால் அவள் நிலை என்னவாயிருக்கும்.

அவருடன் நான் வாழ்ந்த நாட்களிலே எத்தனை தியாகங்களை எனக்காகச் செய்திருப்பார். நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு நாள் கூட என் மனம் நோகக் கதைத்ததில்லையே. இப்படியான நல்லவரை ஏன் என்னிடமிருந்து பறித்தாய் ஆண்டவனே. என்னைப் பார்க்கின்ற எல்லோரும் என்னிடம் நீ கொடுத்து வைத்தனி. என்று சொல்வார்களே. இன்று என்னைப் பார்த்தால் என்ன சொல்லப் போகினம். கடவுளே எனக்கு என் ரமேஸ் வேணும். என்னால் அவரின் பிரிவைத் தாங்க முடியவில்லையே. நான் என்ன செய்வேன்….

குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்த அவளை தொட்டிலிலே படுத்திருந்த குழந்தையின் அழுகுரல் இவ்வுலகிற்கு அழைத்ததினால் தன் நினைவுக்கு மீண்ட அவள் தான் அவ்விடத்திலே வெகுநேரமாக இருந்துவிட்டதை உணர்ந்தாள். மழை விட்டிருந்தது. மழைவெளம் வடிந்து போயிருந்தது. மணலிலே பாதை கீறிவிட்டாற்போல இருந்தது. இலை சருகுகள் வெளளத்திற்கு அடித்து வரப்பட்டிருந்தன. எங்கும் ஒருவித அமைதி காணப்பட்டது. மரங்கள் யாவும் பளபளத்துக் கொண்டிருந்தன. அவள் தன் கன்னங்களிலே வடிந்து கொண்டிருந்த கண்ணீரை தன் கைகளினாலே துடைத்தபடியே ஒருவிதமான தவிப்புடன் குழந்தையிடம் ஓடினாள். ‘என் கண்ணே பசிக்குதா?” என்று செல்லமாகக் கேட்டபடியே குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். இனி அக்குழந்தைதான் அவள் உலகம்.

நீர்க்குமிழிகள் போல அடுத்தடுத்து தன்னை விட்டுப் பிரிந்த தன் கணவன் அப்பா இவர்கள் அனைவரையும் ஓர் உருவமாக தன் குழந்தையிலே காண்கின்றாள். இனி அவளும் ஓர் குழந்தையோடு குழந்தை.

முற்றும்.