Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

குறளும் நிகழ்வும்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

குறளும் நிகழ்வும் 7

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்"

தன் இரு குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு பஸ்ஸிற்காக விரைந்தாள் மீனா. கால்கள் ஸ்னோவிற்குள் புதைய கைகள் விறைக்க ஒருவாறு பஸ் தரிப்பிடத்தை அடைந்தாள். தன்னிரு குழந்தைகளையும் ஒரு முறை குனிந்து பார்த்தவள் ஒருவித திருப்தியுடன் பஸ் வரும் திசையை மிகவும் ஆவலுடன் நோக்கினாள். இந்த பஸ்ஸை விட்டால் நேரத்திற்கு வேலைக்குப் போக முடியாது. அவளதுசுப்பவைசரின் கத்தல் சத்த நினைவே அவளை உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது.

பிள்ளைக்காப்பகத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு வேலைக்கு விரைந்தாள் மீனா. சரியான நேரத்திற்கு வந்துவிட்ட திருப்தியில் தன் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தாள். மதிய உணவு நேரம் இரவு வாட்டி வைத்துவிட்டுப் படுத்த பாண் துண்டுகளைக் கடித்துவிட்டு பச்சைத் தண்ணீரையும் மளமளவென்று குடித்துவிட்டு மீண்டும் இயந்திரங்களோடு இயந்திரமானாள் மீனா. அவளது கைகள் இயந்திரங்களை இயக்கினாலும் நினைவு மட்டும் தன் கணவனுக்கு இன்றாவது வேலை கிடைக்க வேண்டும் என இஷ்ட தெய்வங்களை தியானித்துக் கொண்டிருந்தது. மாலை வீடு வந்து பிள்ளைகளிற்கு உடை மாற்றி சாப்பிட பழங்கள் இரண்டைக் கொடுத்துவிட்டு சமையலில் மூழ்கினாள். அவசர அவசரமாக பிள்ளைகளைக் குளிக்கவார்த்து உடைமாற்றி உணவு ஊட்டியபின் அவர்களைப் படுக்கையில் விட்டுவிட்டு தானும் குளித்துவிட்டு வந்து பார்த்தாள் நேரம் பத்து மணி. அவள் கணவன் இன்னும் வீடு திரும்பவில்லை. வேலை தேடுவதாக ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டு வெளியே செல்லும் தன் கணவன் பற்றி நினைத்துப்பார்த்தாள்.
இனி என்ன மூக்கு முட்டக் குடித்துவிட்டு வருவார். இரண்டு வருடமாகக் கிடைக்காத வேலை இனித்தான் கிடைக்கப் போகின்றதா? போன பிறவியில் நான் என்ன பிழை செய்தேனோ யாருக்குத் தெரியும். பொருமூச்சொன்றை விட்டபடி தன் கணவன் காலையில் குடித்த தேநீர்க் கோப்பை முதற் கொண்டு யாவற்றையும் கழுவியபடியே தமிழ் வானொலியை இயக்கினாள. அப்போ

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்ற திருக்குறளிற்கு விளக்கம் கூறிக்கொண்டிருந்தனர். அப்படியே தண்ணீரை நிறுத்தி விட்டு அதனை உற்றுக் கேட்டாள். ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு என்ன இருக்கிறது? இந்த ஊழை விலக்கி விடுவோம் என்று மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். ஓ எனக்காகத்தான் வள்ளுவர் இதைச் சொன்னாற் போலுள்ளதே எத்தனை அற்புதமான கருத்துக்கள் என நினைத்தவள் மனமெல்லாம் இலேசாகிவிட்டாற் போன்ற ஒருவிதமான உணர்வுடன் தன் கடமைகளைத் தொடர்ந்தாள்.

முற்றும்.