Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

சிறுகதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

தவிப்புக்கள்

பிள்ளைகளை நித்திரையாக்கிவிட்டு தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் பல்கணியில் போயிருந்தாள். காலநிலை மிகவும் இதமாக இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக உடலை வருடிக்கொடுத்தது.வசந்த காலம் என்பதால் பல வண்ணங்களிலே பலவிதமான பூக்கள் பூத்துசொரிந்து கொண்டிருந்தன. பட்டமரங்கள் தளிர்விட்டு தாம் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவு படுத்தின. அவையும் எதிர்பார்ப்புகளுடன் தானே காத்திருந்திருக்கும்… சிந்தித்த வண்ணமாக கதிரையில் வந்து அமார்ந்தபடி வீதியிலே விரைகின்ற வாகனங்களையும் பறந்து செல்லும் பறவைகளையும் வீதியோரமாக விரைகின்ற மனிதர்களையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் சியாமளா. வானத்தில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். பல வர்ணங்களிலே நிறங்கள் தோன்றி சூரியன் மறைய அவையும் மறைந்து கொண்டிருந்தன. இக்காட்சியைப் பார்த்தவள் தன் மனதிற்குள்ளாக இந்த சூரியன் கூட ஓய்வு எடுக்கின்றதா? அப்படியாயின் உனக்கு நிம்மதி உண்டு. நீ கொடுத்துவைத்தனி. நான் …நான்….பாவியா? நான் என்ன பாவம் செய்தேன். எனக்கும் ஓய்வு வேண்டும். ஆனால் உன்போல் அல்ல. நிரந்தர ஓய்வு. திரும்பி வராத ஓய்வு. நான் செத்தாலும் கூட எனக்கு நிம்மதி கிடைக்காது. என் பிள்ளைகளை விட்டு நான் போனால் அவர்கள் கதி .? இப்பிறவியில் நான் அறிய யாருக்கும் துரோகம் செய்யவில்லையே. முற்பிறவியில் செய்த பாவங்கள் தான் என்னைத் தொடருகின்றனவா? அவைகளைப் பொறுமையுடன் அனுபவித்தால் ஒழிய அவை தீரமாட்டா. இது எனக்குத் தெரியும். ஆனால் என்னால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லையே…..
சிறு வயதிலிருந்தே இதே போன்ற அநுபவிப்புகள் எத்தனை. எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலாய் அம்மாவும் அப்பாவும் பிடிக்கும் சண்டைகள். அம்மா எவ்வளவு அடி உதை வாங்கியிருப்பா. பொம்பரில் இருந்து குண்டு போடும்போது கூட இரண்டு பேருக்குள்ளேயும் ஒற்றுமை கிடையாது. அம்மாவுக்கோ சரியான பயம் அதனால் அப்பாவை வரச் சொல்லிக் கத்துவா. ஆனால் அப்பாவோ அசைய மாட்டார். பயத்தினால் தண்ணீர்த்தொட்டியின் கீழ் அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூட சிரித்து வேடிக்கை பார்ப்பார்கள்

இங்குள்ள சனங்கள் ஊரை நினைத்து எவ்வளவு கவலைப்படுகுதுகள். எப்போ போவோம் என்று ஏங்குதுகள். ஏனென்றால் சந்தோசமாக கெளரவமாக வாழ்ந்திருப்பினம் போல. இங்குள்ள என் அயலாரைக் கண்டால் கூட எனக்கு கதைக்க ஏதோ போலிருக்கும். பழைய சியாமளாவைத்தானே என்னைக் கண்டதும் நினைப்பினம். அப்பா பெரிய அரசாங்க உத்தியோகம் பார்ப்பவார் என்று பெயர். அவருடைய உத்தியோகத்தால் தான் ஊரில ஓரளவேனும் தலை நிமிர்ந்து நடக்கவேனும் முடிந்தது. படித்தவருங்கூட. ஆனால் பெண்ணை எப்படி நடத்துவது என்று படிக்கவில்லைப் போலும். ஏன் அம்மா படிக்காதவவே. அம்மாவும் டீச்சராக இருந்தவதானே. பிறகு நாங்கள் ஆறு பிள்ளைகளையும் பார்க்கவேணும் என்று வேலையையும் விட்டுவிட்டா.

ஒரு நாள் எனக்கு ஏழு வயதிருக்கும் என நினைக்கின்றேன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பெரிய சண்டை எனக்கடுத்த தங்கை மாலா தான் அப்பாவிற்கு ஏதோ சொல்லிப்போட்டாள். அவள் உரித்துப்படைத்து அப்பாவின் உருவம் என்பதால் அவள் மீது அப்பா மிகுந்த அன்புவைத்திருந்தார். கூடுதலான சண்டைகளுக்கு அவளே காரணம். அண்ணா தானும் தன்ரபாடும். மற்றைய சின்னங்களுக்கு விளையாட்டு என்றால் காணும். இவர்கள் எவ்வளவு சண்டை பிடித்தாலும் தாங்கள் மூவரும் சேர்ந்து விளையாடுவார்கள் அல்லது எலிக்குஞ்சுகள் போல முழுசிக் கொண்டு ஒரு மூலையில் குந்தியிருந்துவிடுவார்கள். வளர வளர அவர்களும் தானும் தங்கள் பாடுமாகப் போய் விட்டார்கள். அம்மா அப்பா சண்டை முடியவேயில்லை. ஒரு நாள் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பெரிய சண்டை நாங்கள் எல்லோரும் கத்திக் குழறி அழுதோம் அதனால் அயலவர்கள் கூடிவிட்டார்கள். அடுத்த நாள் பாடசாலை போகும் போது எல்லோரும் எத்தனை கேள்விகள் கேட்டார்கள். நான் பட்ட அவமானம் யாருக்குப் புரியும்.. வெந்த புண்ணிலே வேல் பாச்சுவது போல் சொல்லம்புகளினால் துளைத்தெடுத்து விட்டார்கள். தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே அது போல் நான் பட்ட அவமானங்களை சொற்களிலேவடித்துவிட முடியாது. அதை அனுபவித்தவர்களுக்கே விளங்கும்.

சின்ன வகுப்புக்களிலே வீட்டுப் பாடங்கள் குறைவு. ஆனால் வளர வளர வீட்டுப்பாடங்களும் அதிகரிக்க அதிகரிக்க நிம்மதியும் குறைந்து கொண்டே போயிற்று. வீட்டு வேலைகளில் முக்கால்வாசிக்கு மேல் என் தலைமேலேயே விழுந்துவிட்டது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு படிக்க என்று இருந்தால் அம்மா அப்பா சண்டை தொடங்கிவிடும். ஏன் சண்டைபிடிக்கின்றார்கள் என்று இன்றுவரை தெரியவேயில்லை. அம்மா கூடுதலாகச் சமைத்துக் கொட்டுகின்றாவாம். தன்னுடைய ஆட்களுக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றாவாம்.
பிள்ளைகள் ஒருநாளைக்குச் சாப்பிடும் ஒருநாளைக்குச் சாப்பிடாதுகள். அப்போ எப்படி குறைவாகச் சமைப்பது. கஸ்டப்பட்டதுகளுக்கு மிஞ்சிறதுகளைக் கொடுத்தால் என்ன குறைந்தே போய்விடுவோம் என்பது அம்மாவின் விவாதம். அப்பா அம்மாவை அடிக்கும் போது எத்தனை தடவைகள் இடையில் புகுந்து அடி வாங்கியிருப்பேன். அண்ணாவிடம் இவர்கள்பற்றிக் கதைத்தால் அம்மாட வாய்க்கு நல்லா வாங்கிக் கட்டட்டும் என்பான். எனக்கென்றால் இந்த வீட்டை விட்டு எப்போ போவேன் என்றிருந்தது. ஏதோ எங்களுக்குச் சாப்பாட்டுக்கும் உடுப்புக்கும் காசு தந்தால் சரி என்பது அப்பாவின் நினைவு போலும். சமைத்துப்போடுவதுதான் பெரிய வேலை என நினைப்பவ அம்மா. வாய் ஓயாமல் சியாமளா சியாமளா என்று அடிக்கொரு தடவை கூப்பிட்ட படியே இருப்பா.
அண்ணாவும் நான் ஒருத்தி இருப்பதைக் கூட நினைக்காமல் தன் வாழ்க்கையைத் தேடிக்கொண்டார். மாலாவும் அப்படி.. இந்த வீட்டை விட்டு எப்போ போவோம் என்றிருந்த மாதிரி போய் விட்டார்கள். ஆனால் என்னால் அப்படி முடியவில்லை. ஒன்று கெளரவம் கெட்டுவிடும், மற்றையது குடும்பவாழ்க்கையில் இறங்கப் பயம். திருமணம் என்பது எனக்கு முன் பெரிய கேள்வியாகவேயிருந்தது. இருளடைந்த ஒரு பாழுங் கிணறு என்பது போல் தோன்றியது. எனது மாமா தான் தன் மகன் கோகுலனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். எங்கள் குடும்பம் பற்றி அறிந்த எவருமே பெண் எடுக்கவோ கொடுக்கவோ முன்வர மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். முதலில் பல தடவைகள் மறுத்தே விட்டேன். என் பின்னால் உள்ளவர்களைப் பற்றி யோசித்தபின் ஓம் என்று ஒப்புக் கொண்டேன்.
தாய் வாழ்ந்த வாழ்க்கை தலைப் பிள்ளைக்கு என்பார்களே அது என்னளவில் பொய்க்கவில்லை. நான் ஏற்கனவே அநுபவப்பட்டனான். எனவே நான் என் பெற்றோர் விட்ட தவறுகளைச் செய்யப் போவதில்லை. அதனால் தான் நான் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றேன். இவார்கள் இப்படியானவார்கள் என்று புரிந்து கொண்டுவிட்டால் பின் ஏன் வாக்குவாதப்படுவான். வாக்குவாதங்கள் கூடக் கூட கசப்புகள் கூடிக்கொண்டே போகும். அவர்களுடன் கதைத்து எதையாவது நிறைவேற்றவோ சாதிக்கவோ முடியுமென்றால் கதைக்கலாம் இல்லையேல் மெளனமாகவே இருப்பது நல்லது என நினைப்பவள் நான். கொஞ்ச நாட்கள் செல்ல தாங்கள் செய்கின்ற தவறுகளை உணருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்பவள்.

உன் குடும்பத்தைத் தெரியாதா? சந்தி சிரிச்ச குடும்பமடி. உன்ற கொம்மாவையும் கொப்பாவையும் தெரியாதே. நீயும் அந்தக் குடும்பத்தில தானே பிறந்தனி எப்படி உனக்கு அந்தக் குணம் வராமல் போகும். இவை கோகுலனின் வாயிலிருந்து அடிக்கடி வரும் வசனங்கள்.

நான் என்றைக்குமே கோகுலனை எதிர்த்தது கிடையாது. அவருக்கு அது சரி என்று படுவதால் அப்படிக் கதைக்கின்றார் என்று நினைப்பேன். அறியாமை இருளை உடனடியாக மாற்ற முடியாது என்பது என் கொள்கை. ஆனால் பிள்ளைகள் விடயத்தில் என்னால் எப்படி அப்படிப் பேசாமல் இருக்க முடியும்? கடைக்குப் போகும் போதெல்லாம் பிள்ளைகள் கேட்பதை உடனேயே யோசிக்காமல் வாங்கிவிடுவார். ஏதாவது உடுப்புகளைப் பார்த்து இது நல்லாயிருக்கு என்றால் உடனேயே வாங்கிவிடுவார். எங்காவது பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் புது உடுப்புகள். இவை பிழை என்று சொல்லக் கூடாது. சொன்னால் தொடங்கிவிடுவார். இன்று நல்ல குணத்தில் இருக்கிறார்தானே இவைபற்றிக் கதைக்கலாம் என்று கதைத்தால் நல்ல பாம்பு படம் எடுப்பது போலச் சீறிச் சினக்கத் தொடங்கிவிடுவார். வீட்டில் தான் ஆசையாக வாங்கிய பொருட்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து விடுவார். அம்மாவால் தான் அப்பா எல்லாம் உடைக்கின்றார். அம்மா கூடாது என்ற எண்ணம் பிள்ளைகள் மனதிலே குடி கொள்ளத் தொடங்கி விட்டது. கடவுளே இதை எப்படிப் போக்குவது? பிள்ளைகளுக்கு எப்படி விளங்க வைப்பது?
ஒரு நாள் இப்படித்தான் நான் சொன்னேன் என்னப்பா நீங்கள் உந்த விளையாட்டுச் சாமான்களை வாங்குகிற நேரம் அந்தக் காசில நாலு புத்தகத்தை வாங்கலாம் அல்லது ஊருக்கெண்டாலும் அனுப்பலாம் தானே என்று. அதற்கு கிடைத்த பதில் இன்றும் என்னால் மறக்க முடியாமல் உள்ளது. ஏன் உன்ர ஆட்கள் எல்லாம் இங்கதானே இருக்கினம் நீ ஏன் என்ர வீட்டைப் பற்றிக் கவலைப்படுகின்றாய்? அவர்களிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்ற எண்ணமாக்கும். என்றார். கொண்ட கணவனிடமே நல்ல பெயர் கிடைக்காத போது அவருடைய ஆட்கள் தான் என்னை நல்லவள் என்று சொல்லப் போகினமா? அதை நான் எப்படி எதிர்பார்ப்பது. என்ன செய்வது? என் தலைவிதி இது தான். இதை நானாகவா தேடினேன்? இல்லையே. இது நான் போன பிறவியில் செய்த பாவங்களுக்குக் கடவுளால் விதைக்கப்பட்ட விதை. கடவுளுடைய தீர்ப்பு. ஏன் திருக்குறளில் கூட இது பற்றிப் படித்த ஞாபகம்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

இதனை இதனை இவன் இப்படி இப்படி நுகர வேண்டும். இவ்வண்ணம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் வகுத்தான். என்பதைத் தெளிவாக்குகிறது.

விதியையும் அநுபவம் வரும் போது தானே ஒத்துக் கொள்ள முடிகின்றது. வீதியிலே சென்ற வாகனம் ஒன்று ஏற்படுத்திய ஓசையினால் தன் நினைவுக்கு மீண்டவள் சிறிது குளிர்வது போல உணா;ந்தாள்.; பெருமூச்சு விட்டபடி வீட்டிற்குள்ளே போய் பிள்ளைகளை ஒருமுறை பார்த்துவிட்டு வந்து சோபாவிலே அமர்ந்தாள்.
மேசையிலே கிடந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். மனிதன் என்ற தலைப்பிலே வாசிக்க ஆரம்பித்தாள்.

மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்று பொருள். நினைக்கும் கருவி மனம். மனத்தையுடையவன்
மனிதன். மனிதனாகப் பிறந்தவர் எல்லோரும் மனிதனாகிவிட முடியாது. உண்பது
உறங்குவது மக்களைப் பெறுவது உலாவுவது முதலியன நமக்கும் விலங்குகளுக்கும் பொது.
நான் யார்? என் உள்ளம் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? இந்த உடம்பு எப்படி வந்தது? யார் தந்தது? என் பொருட்டுத் தந்தானா? நான் எங்கே போக வேண்டும்? இந்த உடம்பைத் தந்தவனின் தன்மை யாது? அவனை அடையும் வழி எது? என்று சிந்திப்பவனே மனிதன்.
மனிதன் கடவுள் சிந்தனையுடையவனாக இருக்க வேண்டும். இல்லையேல் அவன் ஒரு விலங்கே. மனிதப் பண்புடையவனே மனிதன். நாம் மனிதர்களாக ஆக வேண்டும். சொத்து சுகம் பணம் பதவி இவைகளை நினைத்து நெஞ்சு புண்ணாகி மடிந்துவிடக் கூடாது.

புத்தகத்தை மூடி வைத்தவள் சிந்தனையிலே மூழ்கினாள். எத்தனை அருமையான கதைகள். எவ்வளவு சிந்திக்க வைக்கின்றது. மாயையில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது. இப்படியான புத்தகங்களையெல்லாம் வாசிக்க அவருக்கெங்கே நேரம்.. வீட்டிலே இருக்கும் நேரம் முழுக்க தொலைக்காட்சி முன்னாலேயே கழிந்துவிடும். . அதைவிடக் குடி வேறு. சிலரைத் திருத்தவே முடியாது. கோவிலுக்குப் போவோம் என்று ஒருவாறு கெஞ்சி மன்றாடிப் போனால் கூட நிம்மதி அங்கும் கிடைப்பதில்லை. பதிலாக மனதில் ஏதோ ஒரு கனம் கூடுவது போன்ற உணர்வே தோன்றுகின்றது. வீட்டிலேயே கடவுளைக் கும்பிடலாம் போல உள்ளது. இந்தக் கனடா நாட்டிலே பணம் உழைப்பதற்காக என்று எத்தனைபேர் வீடு மனைவி மக்கள் என்று பாராமல் இரண்டு வேலை என்று ஓடுகிறார்கள். தாய் தகப்பன் இருவரும் மாறி மாறி ஏழு நாட்களும் வேலைக்குப் போகின்றார்கள் வீட்டிலே இருக்கின்ற பிள்ளைகள் தங்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று ஒருமுறையேனும் சிந்திக்கத் தவறுபவர்கள் எத்தனை பேர்?. பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட பருவம் வரை தானே தங்களுடைய அன்பு ஆதரவு அரவணைப்புகளை பெற்றோர்களிடமிருந்து எதிர் பார்க்கின்றனர் என்று நினைக்கின்றேன். அது கிடைக்காத போது அவற்றிற்காக ஏங்குவார்களாக இருக்கும் என்னைப் போல. இவ்வளவு காலத்தின் பின்பும் கூட நான் ஏங்குகின்றேனே இது யாருக்குப் புரியும். ஓய்வு இல்லாமல் உழைக்கின்றார்கள். கொஞ்சம் காசு சேர்ந்ததும் ஒரு வீட்டை வாங்குவார்கள். பின் அதற்காக என்று இரவு பகல் பாராது மாடாக உழைப்பார்கள். கண்டது என்ன? ஒருவர் போல் மற்றவரும் வாழ நினைப்பது தான் காரணமோ? ஓய்வாக வீட்டிலே இருக்கும் நேரங்களில் கூட ஒருவரோடொருவர் எலியும் பூனையும் போலிருப்பார்கள்..

வாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படி வாழ வேண்டும் என்று அறியாத மனிதர்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழ நினைக்காதவர்கள்.
என் வாழ்க்கைதான் இப்படியென்றால் என் பிள்ளைகளின் வாழ்க்கையாவது சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதுகும் முடியாது போலுள்ளதே. அன்று சிறுமியாக இருந்தபோது என் மனம் நொந்து அதனால் ஏற்பட்ட காயங்கள் இன்றுவரை ரணமாகவே இரத்தம் கசிந்தபடியே இருக்கின்றது. காரணம் காயங்கள் புதுப்பிக்கப்படுவதாயிருக்கும். கனடாவிலோ பிள்ளை வளர்ப்பதென்பது மிகக் கடினமான காரியம் என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர்கள் மீது மிகுந்த அன்பு காட்ட வேண்டும்.. இல்லையேல் அவர்கள் கதி? நினைக்கவே முடியாமல் உள்ளது.

ஆண் வர்க்கம் என்றாலே ஆதிக்கம் படைத்தவர்கள் என்ற நினைப்புப் போலும். என்னை எவ்வளவு துன்புறுத்தினாலும் ஏற்றுக் கொள்வேன். ஆனால் பிள்ளைகளிற்கு முன்னால் வைத்து ஒன்றும் தெரியாதவள் ஞாயமில்லாதவள் அவர்களுடைய ஆசைகளைப் புறக்கணிப்பவள் என்பதும் என்னை அடிமை போல் நடத்துவது இவற்றை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வீட்டில்தான் நிம்மதி இல்லையென்றால் எனக்குக் கிடைத்த வேலையும் அப்படி.. பாவியார் போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்பார்களே அது போல.
என்மீதும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று ஏங்கிய அந்த ஏக்கங்கள் இன்றும் என் மனதிலே ஒரு மூலையிலே இருந்துகொண்டேயிருக்கின்றது. அந்த ஏக்கங்கள் விழித்துக் கொள்ளும் போது நான் சாதாரண மனிசியாக என்னைக் கட்டுப்படுத்த முடியாதவளாகத் தவிக்கின்றேன். என்மீது யாராவது பாசம் காட்ட மாட்டார்களா என்று பரிதவிக்கின்றேன். அந்த அன்பை பாசத்தை என் பிள்ளைகளிடமிருந்தாவது பெறலாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இன்று அதுவும் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கின்றதே. நான் இறப்பதற்கு முன்பாகவாவது எனக்கு அந்தப் பாக்கியம் கிட்டுமா? என் ஏக்கஙகள் தீர வாய்ப்புண்டா.
தானே கேள்விகளைக் கேட்டு அவற்றிற்குத் தானே பதிலும் கூறிக் கொள்வாள். அநேகமான வேளைகளிலே சியாமளா தனிமையிலிருந்து அழுது தீர்ப்பாள். அது அவளுக்கு சிறிது ஆறதலாக இருக்கும்.
சம்பள நாள் என்றால் வேலை முடிந்ததும் தாமதமாகவே வீடு வருவார். வரும்போது கைநிறைய தேவையற்ற சாமான்களும் பியர்ப் போத்தல்களும் கொண்டு வருவார். வந்து அதைச் சமை இதைச் சமை என்று எத்தனை சொல்லுவார், நித்திரையாக இருந்தாலும் கூட பாவம் பார்க்காமல் எழுப்பி விடுவார்.
ஒருநாள் அவரின் நண்பன் தியாகு நான் தனிமையில் இருந்த போது வீட்டிற்கு வந்து என் கணவரின் செயல்கள் பற்றி இரக்கமாகக் கதைப்பவர் போலக் கதைத்து தன் மனதிலே என்னை இடம் பிடிக்க வைக்கப் பட்ட பாடுகள். நான் படிக்காத முட்டாளா இவர்களுடைய கதைகளுக்கு எடுபட.
தியாகு என் கணவரின் நண்பன் என்பதால் நான் அவனுடன் சாதாரணமாகவே கதைப்பதுண்டு. அதை அவன் தவறாக எடை போடுவான் என்று யார் கண்டது. நேற்றும்;
அவன் இப்படித்தான் கோகுலனின் தீய பழக்கங்கள் பற்றி பலவற்றையும் என்னிடம் சொன்னான். அவை யாவும் நான் அறிநதவைகளே. இருந்தாலும் இன்னொருவர் வாயால் கேட்கும் போது என்னால் தாங்க முடியாத வேதனையாக இருந்தது. பிடி கொடுக்க மனமில்லாதவளாக எதிர்த்து வாதாடினேன். என்மீதும் என் பிள்ளைகள் மீதும் அவர் மிகுந்த பாசம் வைத்திருப்பதாயும் எங்களுக்காக அவர் படுகின்ற கஷ்டங்கள் எவ்வளவு என்று உமக்கெங்கே தெரியப்போகின்றது என்று எத்தனை பொய்களைச் சொன்னேன். ஆனால் தியாகு முற்று முழுதாக கோகுலனை நன்கு அறிந்தவனாகையால் அவன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. கடைசியில் நான் அழுதேவிட்டேன். அப்போ பார்த்தீரா ஏன் அழுகின்றீர்? நான் பொய் சொல்லவில்லை. உம்மீது நான் தனி மரியாதையும் அன்பும் வைத்துள்ளேன். உம்மைப் போல ஒருத்தியை மனைவியாக அடையக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.. இதை உணராத மனிதனாக கோகுலன் இருப்பதை நான் பல தடவைகள் நினைத்துப் பார்ப்பதுண்டு. என்று பலவற்றையும் தழைந்த குரலிலே மிகவும் குழைவாகக் கூறியபடியே என்மீது இரங்குபவன் போலக் கிட்டவந்து என் கைகளைப் பற்றினான். விடுங்கோ என்று நான் கத்தியபடியே போ வெளியே என்று அவனிடம் கூறவும் கோகுலன் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

கோகுலனோ அவர்களின் கதைகள் யாவற்றையும் கதவிற்கு வெளியே நின்று கேட்டுவிட்டு தான் எவ்வளவு பிழைகளை சியாமளாவிற்குச் செய்துவிட்டோ ம் என்ற குற்ற உணர்வுடனேயே உள்ளே வந்தான்.
தியாகுவோ சமாளிக்க முயன்றவனாக பிதற்றிப் பிதற்றிக் கதைத்தான். ஒன்றுமே தெரியாதவன் போல தியாகு எப்ப வந்தனீர் பியர் குடியுமன். என்று சாதாரணமாகக் கேட்டபடியே தான் கொண்டுவந்த சாமான்களை சியாமளாவின் கைகளிலே திணித்தவனாக சரியாப் பசிக்குது சாப்பாட்டைப் போடும் என்றான். சியாமளாவோ கை கால்கள்; பதறியவளாக வெலவெலத்துப் போனாள். என்ன அடுத்து நடக்கப் போகின்றதோ என்று நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்திலே தியாகு போய்விட்டான். ஆனால் சியாமளாவிற்கோ தியாகு பற்றிச்சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் பயத்திலே அப்படியே இருந்துவிட்டாள். கோகுலனும் இதுபற்றி அவளிடம் எதுவுமே கேட்கவில்லை.

கடவுளே ஏன் என்னைச் சோதிக்கின்றாய். எனப் பலவாறு பல சிந்தனைகளிலும் மூழ்கியிருந்தவள். நேற்று தியாகு நடந்துகொண்ட விதம் பற்றி இன்றாவது கோகுலனிடம் சொல்லாவிட்டால் அவள் நெஞ்சே வெடித்துவிடும் போல உணர்ந்தாள். குற்ற உணர்வு அவளைக் குடைந்து சித்திரவதைப்படுத்திக் கொண்டிருந்தது. நேரத்தைப் பார்த்தாள். மணி பத்தைத் தாண்டியிருந்தது.
இன்று எப்படியாவது சொல்ல வேண்டும் என நினைத்தபடியே சோபாவிலே சரிந்து படுத்து விட்டாள். கோகுலனின் வரவை எதிர் பார்த்தபடி கவலைகளில் மூழ்கி கண்ணீரில் நனைந்தபடியே நித்திரா தேவியை அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தின் பின் வீடு வந்த கோகுலன் சியாமளா படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏதோ நினைத்தவனாகச் சாப்பாடுகளை எடுத்து சூடாக்கிக் கொண்டிருந்தான். மைக்குரோவேவின் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு பதறியபடியே எழுந்தவள் எப்போ வந்தீர்கள் ஏன் என்னை எழுப்பவில்லை. என்றபடியே எழுந்து ஓடினாள். தன் கடமைகளைச் செய்வதற்காக.

இன்று ஓவர் டைம் அதுதான் லேட் ஓவர் டைம் செய்து வாற காசில வீட்டிற்கு அனுப்பலாம்தானே. சியாமளாவிற்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. மெளனமாக அவன் சொல்பவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். இந்தாரும் இது உமக்கு இந்த நீலநிறம் உமக்கு நல்ல வடிவாயிருக்கும் என்று வாங்கி விட்டேன். பிடித்திருக்கா? பிடிக்காவிட்டால் நாளைக்குக் கொண்டு போய் மாற்றலாம் என்றான். அவனுடைய குரலிலே ஏதோ ஒன்று தன்னுள் ஊடுருவுவதை அவளால் உணர முடிந்தது. தனக்காக முதன் முதலாக அன்பாக வாங்கி வந்தது எப்படி… எப்படிப் பிடிக்காமல் போகும். அவள் கண்களிலே நீர் மல்கியது. உணர்ச்சிவசப்பட்டவளாக அப்படியே அந்தச் சேலையை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். தியாகுவைப்பற்றி சொல்லிவிடவேண்டும் என்று எண்ணியபடி அதுபற்றி பேச்சை ஆரம்பித்தவுடனேயே அவளின் வாயை தன் கையால் பொத்திய கோகுலன் எனக்கு எல்லாமே தெரியும் இதைப்பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே என்று கூறியபடி அவளைத் தன் மார்புடன் அணைத்துக்கொண்டான்.
சியாமளா தன் மனதின் தவிப்புகள் எங்கோ மறைவது போல உணர்ந்தாள். தன் மீது தான் எதிர்பார்த்த அந்த அன்பு மழையின் தூறள்கள் லேசாக விழ ஆரம்பித்திருப்பதை மெல்ல உணரத் தலைப்பட்டாள்.

முற்றும்.