Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

சிறுகதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

காற்றிலாடும் ஜோதி

யமுனாவிற்குத் திருமணமாகி மூன்றே மாதங்கள் தானிருக்கும். வசந்த காலத்தில் பூத்துப் புது மணம் பரப்பும் பூவென மலர்ந்திருந்தாள். ஆமாம் அவளது வாழ்க்கையிலும் புது வசந்தம் வீசிக் கொண்டிருந்தது. தன் எண்ணப்படியே தான் விரும்பிய முரளியையே திருமணமும் செய்து கொண்டாள் யமுனா.
தேன் சிட்டுக்களெனச் சிறகடித்துப் பறந்து திரிந்தனர் அவர்கள்.
அவள் பெற்றோருக்கு ஒரே பெண். செல்லப் பெண். பல்கலைக்கழகம் வரை படித்திருந்தாள். முரளியோ பரம ஏழை மூன்று சகோதரிகளுக்கு ஒரே அண்ணன். பொறுப்புக்களுடன் கூடப் பிறந்தவன். பொறுமையின் சின்னம். இருட்டறைக்கு ஒரு மெழுகுவர்த்தி. இவ்வளவு கஸ்டங்களுக்குள்ளும் அவன் டாக்டராகப் படித்து முடித்து விட்டிருந்தான். இருக்கின்ற காணி வீடு யாவற்றையும் அடைவு வைத்து அவனைப் படிக்க வைத்திருந்தார் கதிர்காமர். தன் மனைவி இறந்த பின்பும் கூட மறுமணம் செய்யாமல் தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்.

யமுனா, முரளி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கி விட்டிருந்தனர். இது நாளடைவில் இணைபிரியாக் காதலாக மாறிவிட்டது. கோடி கோடியான கனவுக் குவியல்களுக்குள் மிதந்து வானத்திலே சஞ்சரித்துப் பறந்தனர்.
யமுனா முரளியைக் காதலிப்பதை உணர்ந்த யமுனாவின் பெற்றோர் முறைமாப்பிளை குமார் பற்றிச் சிந்தித்தனர். ஈற்றில் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக முரளியின் பெற்றோரிடம் இது பற்றிக் கதைக்கத் தீர்மானித்தனர். தம் செல்வ மகளின் கண்கள் கலங்கி விடுமோ என அஞ்சினர். அதனால் குமார் குடும்பத்தவருடனான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன.
முரளி ஏழையாயினும் தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் உடையவன். அவனுடைய குடும்பத்தினரும் கண்ணியமானவர்களே. முரளியின் தந்தையாரிடம் யமுனாவின் பெற்றோர் தாமாகவே சென்று கதைத்தார்கள். கற்பனையில் கோட்டை கட்டி கனவுகளில் வழி சமைத்து வாழ்ந்து நிற்கும் அச் சின்னஞ் சிறுசுகளை நிஜ உலகில் வாழவிட அப்பெற்றோர் முயன்றனர். தங்கள் குடும்ப நிலைமை முரளிக்கு இருக்கக்கூடிய பொறுப்புக்கள் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறினார் கதிர்காமர். இப்போ எப்படிச் சம்மதிப்பது… இனித்தானே உழைக்கத் தொடங்கவுள்ளான்.. பால் பொங்கி வருகின்ற வேளையிலே பானையுடன் பாலைக் கேட்கிறார்களே…இந்தப் பாலை எவ்வளவு பக்குவமாகக் காச்சினேன்… என் கனவுகள் இந்தளவும் தானா..?”” என ஏங்கியவண்ணம் பெருமூச்சொன்றை விட்டார். அந்தப் பெருமூச்சின் வெம்மை அவர் இதயத்தின் போராட்டத்தில் ஏற்பட்ட குமுறல்களின் வெளிப்பாடாயிருந்தது. அதே நேரம் தன் மகனின் விருப்பத்தையும் தட்டிக் கழிக்க மனமில்லாதவராக பலவற்றையும் யோசித்து தடுமாறிக் கொண்டிருந்தார். எந்த முடிவுக்குமே உடனடியாக வரமுடியாதவராக இருதலைக்கொள்ளி எறும்பு போலத் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவரது வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன. எழுந்து கைகளைப் பிசைந்தபடி அங்கும் இங்குமாக தாமரை இலைமீது தண்ணீர் போலத் தத்தளித்தார். திடீரென பதில் சொல்லத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அங்கு நிசப்தம் நிலவியது. அந்த மெளனத்தை யமுனாவின் அப்பா குமாரசாமி தான் கலைத்தார்.

என்ன கதிர்காமார் கனக்க யோசிக்கிறியள் போலக் கிடக்கு. நான் உங்களக் குழப்பிப் போட்டன் போல. நான் ஏதும் தவறாகக் கதைத்து விட்டேனோ. சின்னஞ் சிறிசுகள் விரும்பிட்டுதுகள். அதுகளின்ற மனதை ஏன் புண் படுத்துவான் என்றுதான் நாங்கள் இங்க வந்தனாங்கள். எங்களப் பற்றி உங்களுக்கும் தெரியும் தானே. எங்களுக்கும் யமுனா ஒரே பிள்ளை வேற பொறுப்புக்கள் என்று சொல்ல என்ன இருக்கிறது.. எங்களுக்குப் பிறகு எல்லாம் அவளுக்குத்தானே.” என்று சொல்லிக்கொண்டே போன குமாரசாமியை இடைமறித்தார் கதிர்காமர்.
”அப்படி ஒன்றுமில்லை…… சகோதரிமாரின் அலுவல் முடியப் பார்ப்போம் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்…… அவார்களைப் பிரிக்கும் எண்ணம் எனக்கும் கிடையாது. காதலிப்பவர்களைப் பிரிப்பது பெரிய பாவம்” என்றார் கதிர்காமர் பதிலுக்கு தயங்கியவாறே. அதற்கு குமாரசாமியோ ”மற்றப் பிள்ளைகளின் அலுவல்களையும்; சிறப்பாக செய்யலாம் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ.” என்று மிகவும் அமைதியாகவும் தெளிவாகவும் நிறைவாகவும் கதைத்தார். கதைத்ததோடு நிற்காது தான் சொன்னது போலவே திருமணத்தின் பின் ஒரு தொகைப் பணத்தை முரளியின் சகோதரிகளின் எதிர்காலத்திற்கென அன்பளிப்பாகக் கொடுக்கவும் தவறவில்லை.
பெரியோரின் சம்மதத்துடன் முரளி யமுனா திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காதலர்கள் வாழ்க்கையில் இணைந்தால் அவர்கள் மகிழ்ச்சியை எப்படி வருணிப்பது. பட்டாம் பூச்சிகளெனச் சிறகடித்துப் பறந்தனர். அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள். பார்ப்பவர்களின் கண்கள் பட்டுவிடும் போல இருந்தது. அழகு, குணம், நடையுடை பாவனை யாவையுமே அவர்களுக்கிணையாக யாருமே இருக்கமுடியாது என்பது போல் தோன்றியது. அவர்கள் தங்கள் கடமை உணர்வையும் மறக்காமல் செய்து வந்தனர். தேவையான நேரங்களில் தங்கள் நேரத்தை மணிக்கணக்காகத் தங்கள் நோயாளிகளுடன் செலவு செய்யவும் தவறவில்லை. தம் தாய் நாட்டிற்காக தங்கள் பங்களிப்பையும் செய்தனர்
இருவரும் கை நிறைய உழைத்தார்கள். முரளி தன் சம்பளத்தில் ஒரு பகுதியை தன் குடும்பத்திற்கே கொடுத்து வந்தான்.
ஒருநாள் யமுனாவும் முரளியும் ஸ்கூட்டரில் யமுனாவின் வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். நாட்டுப்பிரச்சனையும் கூடிக்கொண்டே போயிற்று. எப்போ யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என தெரியாத நேரம் அது. பெரியாஸ்பத்திரியில் நாட்டுப்பிரச்சனைகளினாலே பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தினமும் பார்க்கையிலே இனம் தெரியாத சோகத்திலே ழூழ்கி விடுவாள் யமுனா. ஒவ்வொரு நோயாளியை அண்மிக்கும் போதும் அவள் இதயம் பலமாக அடிக்கத் தொடங்கிவிடும். வேதனையாலே அந்த நோயாளிகள் முனகும் சத்தங்கள் அவள் இதயத்தை முட்கம்பிகளால் கீறி இழுப்பது போன்ற வலியை ஏற்படுத்தும்.
பாவம் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் கடவுள் இவர்களுக்கு இப்படித் தண்டனை கொடுக்கின்றான்.” என்று பலதடவைகள் முரளியிடம் சொல்லி வருந்தியிருக்கிறாள். வீட்டிற்கு வரும் போது இருவரும் ஒவ்வொரு நோயாளியைப் பற்றியும் கதைத்தபடியே வருவார்கள். அன்றும் பல திசைகளில் இருந்தும் ஷெல்கள் வந்து கொண்டிருந்தன. சிறிதளவு இருள் கவ்வியிருந்ததால் ஷெல்கள் கூவிக்கொண்டு போவது தீப்பிழம்பாகத் தெரிந்தது. தங்கள் பக்கமாகவும் ஷெல் வருவதை உணர்ந்தவர்கள் பயந்து பயந்து ஒருவாறு வீடு போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஷெல் வீச்சும் ஓய்ந்து போயிருந்தது. ஆனால் வீட்டில் ஒருவரும் இல்லை. வீட்டு முற்றத்திலே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே போனார்கள். வீடு இருளில் ழூழ்கியிருந்தது. யமுனாவும் முரளியும் ஆளுக்கொரு திசையாக கூப்பிட்ட படியே அவார்களைத் தேடிக்கொண்டு போனார்கள். மீண்டும் ஷெல்லடி தொடங்கிவிட்டிருந்தது. பயந்தபடியே ”பங்கருக்குள் வாங்கோ” எனக் கத்தியவாறு யமுனா பங்கரின் வாசலுக்கு அண்மித்திருந்தாள். அந்தவேளை திடீரென வந்த ஷெல் அவர்களின் வீட்டின் மீது விழுந்து வெடித்தது. யமுனா அதிர்ந்துபோய் அப்படியே மயங்கிவிட்டாள்.

நீண்ட நேரத்தின் பின் சுய நினைவிற்கு வந்தவள் நடந்தவற்றை உணர்ந்தாள். தன் தாய் தந்தையார் அருகிலிருப்பதை அறிந்தாள். ஆனால் முரளியைக் காணவில்லை. முரளி பற்றி அவர்களிடம் கேட்டாள். தங்களுக்குத் தெரியாதென அவர்கள் கூறினர். மூவருமாக விளக்கொன்றை பிடித்துக்கொண்டு முரளியைக் கூப்பிட்டபடியே போனார்கள். எதுவிதமான பதிலும் வராததால் அவர்கள் அச்சம் கூடிக் கொண்டே போயிற்று. யமுனாவின் குரல் தளுதளுக்கத் தொடங்கிவிட்டது. நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. கை கால்கள் வெலவெலக்கத் தொடங்கிவிட்டது. நா தளதளத்தது. குளறிக் குளறி தன்னாலியன்றமட்டும் குரல் எழுப்பிக் கூப்பிட்டாள். பதில் எதுவுமில்லை. அக்கம் பக்கத்து வீட்டாரெல்லாம் கூடிவிட்டிருந்தனர். யமுனாவின் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. யமுனாவின் அம்மாவும் அப்பாவும் அதே நிலையிலேயே இருந்தனார். அவர்களின் நிலைமையை சுற்றி நின்றவர்கள் உணர்ந்து விட்டிருந்தனர். அவர்கள் யமுனாவிடம் நடந்தவற்றை விபரமாகக் கேட்டபின் இடிபாடுகளுக்குள் தேடிப் பார்த்தனர். ஒரு சிறுவன் ஓடிவந்து ”அங்க.. .. .. .. அங்க நான் கண்டேன்” என வியார்த்து விறுவிறுத்தபடியே சொல்லிக்கொண்டிருப்பதை யமுனா கேட்டுவிட்டாள். எல்லோரும் அச்சிறுவனின் பின்னாலே போனார்கள் அவார்கள் போவதை அவதானித்தவள் ஒரே ஓட்டமாக தள்ளாடிய படியே ஓடினாள். அங்கே அவள் தன் முரளி கிடந்த காட்சியைக் கண்டதும் அப்படியே ”ஐயோ முரளி என்னைவிட்டுட்டுப் போட்டிங்களே ..”எனக் கதறியபடியே அவனுடைய சிதறிய உடல் கிடந்த இடத்தை நோக்கி ஒட முயற்சித்தாள். ஆனால் அதற்கிடையில் அவள் மயங்கிவிட்டாள்.

மீண்டும் சுய நினைவுக்கு மீண்டபோது. அவள் சாதாரணமாக எல்லோரையும் வெறித்துப் பார்த்தாள். யாருடனும் எதுவுமே கதைக்கவில்லை. குமாரசாமியும் ஜானகியும் தம்மகளின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார்கள். இடிமேல் இடி விழுந்தது போன்றிருந்தது. முரளியின் ஈமக்கிரியைகள் மிகவும் சாதாரணமாகவே நடைபெற்றன. அன்றிலிருந்து அனைவருமே நடைப்பிணமாகவே மாறிவிட்டார்கள்.
யமுனா ஷெல்லடிக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் எழுந்து ஓட முயற்சிப்பாள். அவளது உடல் நடுங்கி வியர்த்து மிகுந்த சிரமப் படுவாள். எவ்வித வார்த்தைகளுமே அவள் வாயிலிருந்து வருவதேயில்லை. இப்போ அனைவரையும் இடம் பெயர்ந்து போகச் சொன்னதால் அவார்கள் பாடு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. அப்படியே அனைவரையும் போல் ஒரு அகதி முகாமிலே தஞ்சம் புகுந்தார்கள். அங்குள்ள அனைவருக்கும் யமுனாவை வேடிக்கை பார்ப்பது ஒரு பொழுது போக்காகப் போய்விட்டது. வெளியே போகும் போதெல்லாம் சிறுவர்கள் ”ஏய் அந்த விசரியைப் பார்” என்று சொல்லிக்கொண்டு கூடிவிடுவார்கள். விபரம் புரிந்தவர்கள் அனுதாபங் காட்டுவார்கள். சிலர் தங்கள் சோகக் கதைகளைக் கூறி இவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள். சிலர் இவர்களின் கஷ்டங்களையும் கவலைகளையும் கேட்டு தங்கள் கவலைகளைச் சிறிது மறந்திருப்பர்கள் குமாரசாமியும் ஜானகியும் கடவுள் தமக்கிட்ட சோதனைகளை நினைத்து மனம் வருந்தினார்கள். சொத்து சுகம் செல்வாக்கு யாவற்றையும் இழந்த துக்கம் அவர்களை வாட்டவில்லை. தம் அருமை மகளின் பரிதாப நிலை கண்டு நாளுக்கு நாள் சாகாமல் செத்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று அகதி முகாமிற்கு மன நோயாளிகளைப் பார்வையிட டாக்டர் குமார் வந்திருந்தார். மன நோயாளிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குமார் தற்செயலாகத் தன் பார்வையை நிலத்திலே அமர்ந்திருக்கும் நோயாளிகள் மீது ஓர் முறை செலுத்தினார். அவர் பார்வை அப்படியே யமுனா மீது நிலை குத்தி நின்றது. அவரால் அவர் கண்களை நம்பவே முடியவில்லை. ‘யமுனா நீ என் நோயாளியா? உனக்கு என்ன நடந்தது? உன்னை இந்த நிலையில் பார்க்கவா நான் இந்தப் படிப்பெல்லாம் படித்தேன். எனப் பலவாறு நினைத்தபடியே அருகில் இருந்த தன் மாமா மாமியையும் பார்த்தான் குமார். இவர்களுக்கா இக்கதி. ”கடவுளே இது என்ன சோதனை.”
யமுனாவின் முறையும் வந்தது. யமுனாவின் தாய் தந்தையருக்கு என்ன கதைப்பதென்றே தெரியாமல் அழத் தொடங்கி விட்டனர். ”குமார் எங்களை மன்னித்துவிடு. நாங்கள் உனக்குச் செய்த துரோகத்திற்கு கடவுள் எங்களை நன்றாகத் தண்டித்துவிட்டார். அவர்கள் நடந்த யாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறினார்கள். ”நான் யமுனாவைக் கவனித்துக் கொள்வேன் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்” என்று ஆறுதல் கூறினான் குமார். அவனின் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.
ஆமாம் யமுனாவின் முறை மாப்பிள்ளை முறையானவன் தான் குமார். குமார் யமுனாவைத் தன் இதயத்திற்குள் வைத்துப் பூஜித்து வந்தவன் தான் தன் காதலை உரிய நேரத்தில் சொல்லத் தவறியதால் அவளை இழந்து விட்டிருந்தான். ஆனால் இப்படி அவளைச் சந்தித்ததில் அவன் மனமுடைந்து போயிருந்தான்.
யமுனா குடும்பத்தினர் இப்போ பழையபடி குமார் குடும்பத்துடன் ஒற்றுமையாகிவிட்டிருந்தனர். அனைவரது கவலையும் யமுனாவின் மேலிருந்தது. குமார் தன்னாலியன்றவரை வைத்தியங்கள் செய்ததன் பலனாக யமுனாவும் தேறிக் கொண்டு வந்தாள். தமது மகளின் வாழ்க்கை மீண்டும் தளிர்விட ஆரம்பித்துவிட்டதை உணர்ந்து உள்ளம் பூரித்துப் போயினர் யமுனாவின் பெற்றோர். காற்றிலே ஆடிக் கொண்டிருந்த ஜோதி ஒன்றை அணையாமல் காத்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் குமார்.

முற்றும்.