Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

படித்துச்சுவைத்தவை

மறந்து விடுங்கள் மன அழுத்தத்தை!

மன அழுத்தம் குறித்து பல தகவல்களையும், "தவறான முறையில் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முயலுவது நீண்ட நாள் பலனைத் தராது. மேலும் அதுவே, மன உளைச்சல் அதிகரிக்கக் காரணமாகி விடும்" என்பதையும் இப்பகுதியில் கண்டோம்.

மன அழுத்தத்தைப் போக்கவல்ல சரியான, எளிய வழிகள் சில உள்ளன. அவை குறித்துக் கீழே காணலாம்.

உங்கள் வாழ்க்கையைக் கட்டுக்குள் வைப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்ற தெளிவுதான், மன அழுத்தத்தினைச் சமாளிக்கும் வழிமுறைகளுக்கான அடித்தளம் (Foundation) ஆகும்.அடுத்ததாக, மன அழுத்தத்ததைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான வழிகளைப் பின்பற்றுமுன், உங்களுக்கு மன அழுத்தம் எக்காரணத்தினால் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால், அது எளிதல்ல. பல சமயங்களில், நாம் எரிச்சல் படுவதற்கான நிகழ்ச்சி ஒன்றாகவும், அதை வெளிப்படுத்துவதற்கான சூழல் வேறொன்றாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, அலுவலகத்தில், மிகுந்த வேலைப்பளுவினை உடையவர், பரபரப்பாக வேலை செய்யும் வரை அதனால் ஏற்படும் இறுக்கத்தை உணரமாட்டார். ஆனால், போக்குவரத்து நெரிசலோ, மனைவி அல்லது குடும்பத்தாருடன் ஏற்படும் உரையாடலோ, அவர் அந்த இறுக்கத்தால் ஏற்பட்ட உளைச்சலையும் எரிச்சலையும் வீட்டில் காட்டுவார். அவரிடம் கேட்டுப்பாருங்கள். 'வீட்டில் ஒரே தொணதொணப்பு' என்றோ, 'போக்குவரத்து நெரிசல். அதனால் எரிச்சல் ஏற்படுகிறது' என்றோ சொல்வாரே தவிர வேலைப்பளு என்று அறிந்திருக்க மாட்டார். சுய அலசலை மேற்கொள்வதன் மூலமும், பதட்டமும், எரிச்சலும் மேலிடும்பொழுதும், இயலாமையினால் வெதும்பும் நேரங்களில், உடனடியாக ஒரு குறிப்பேட்டில், அந்த நிகழ்ச்சியையும், உங்கள் மனநிலையினையும் குறித்து வைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்னைகளின் ஆணிவேர் புலப்பட்டுவிடும். அதன்பிறகு அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கலாம். எல்லாப் பூட்டுகளையும் திறக்க ஒரே சாவி உதவாது. அதுபோல், வெவ்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க வெவ்வேறு விதமான உத்திகள் தேவைப்படும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளுக்கு ஏற்ப சமாளிக்கும் வழிகளை நான்காகப் பகுக்கலாம்.

1. உளைச்சலினை உண்டாக்கும் காரணிகளைத் தவிர்த்துவிடுதல்:
கூட்டங்களும், நெரிசல்களும் உங்களுக்குப் பிடிக்காதா? இரைச்சலான இடங்களும், நீண்ட வரிசைகளும் உங்களுக்கு எரிச்சலை மூட்டி, பதட்டத்தை ஏற்படுத்துகின்றனவா? அப்படியானால் அவற்றைத் தவிர்த்துவிடுவது உங்கள் கையிலேதானே இருக்கிறது. போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு அவதிப்படாமல் இருக்க வேண்டுமானால், சற்று முன்னதாகவே கிளம்பிவிடுங்கள். நேரம் தவறாமையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பாதிக் கஷ்டங்கள் குறைந்துவிடும்.

சில வேலைகள், சில மனிதர்களுடன் பழகுவது மன அழுத்தத்தை ஏற்படுத்துமானால் அவற்றைச் செய்வதை / அவர்களைச் சந்திப்பதை கூடியவரை தவிர்த்துவிடுங்கள். உங்களை வேண்டுமென்றே வெறுப்பூட்டும் சிலர் இருக்கக்கூடும். அவர்களிடம் பேச்சைக் குறையுங்கள். அவர்கள் உங்களுக்குப் பிடிக்காத வகையில் பேசினால், பேச்சை மாற்றியோ, பேசுவதை நிறுத்தியோ விடுவது நல்லது.

சில காட்சிகள், சில செய்திகள் சிலருக்கு மன வருத்தத்தையும் கோபத்தையும் வரவழைக்கக்கூடும். அத்தகைய செய்திகள்/காட்சிகள் இடம்பெருகையில் தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள் அல்லது வேறு காட்சிக்குத் திருப்பி விடுங்கள்.

உங்கள் மீது தேவையற்ற சுமைகளை இழுத்துப் போட்டுக்கொள்ளாதீர்கள். உங்களால் முடியாத அல்லது உங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்யும்படி யாராவது கேட்டால், தாட்சண்யமின்றி மறுத்துவிடுங்கள். இது குறித்து விளக்கும் "Don't say Yes when you want to say No" என்றொரு அருமையான புத்தகமே இருக்கிறது.

2. உளைச்சலினை உண்டாக்கும் காரணிகளை மாற்ற முயலுதல்:
உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைத் தவிர்த்துவிடுவது என்பது எப்போதும் சாத்தியமாகாது. உங்கள் வாழ்க்கைத்துணை, உங்கள் மேலதிகாரி அல்லது உடன் பணிபுரிபவர்களை அன்றாடம் தவிர்க்க இயலுமா என்ன? அவர்கள் செயல் அல்லது பேச்சு உங்களுக்கு உளைச்சலைக் கொடுக்கிறதா? மனம் விட்டு அவர்களுடன் பேசுங்கள். தாழ்ந்து போவது(Submissive), சண்டையிடுவது (Aggressive) என்ற இரண்டுமே எந்தச் சூழலிலும் பலன் தராது. சொல்லப் போனால் எதிர்மறைப் பலனை அளித்துவிடக் கூடும். ஆதலால், நீங்கள் உங்கள் மனநிலையை, உங்கள் விருப்பு வெறுப்புகளை, நிதானமாகவும் திடமாகவும் எதிராளியிடம் தெரிவியுங்கள் (Assertive Communication).

உங்களுக்குப் பிடிக்காத வேலையா? அதில் எப்பகுதி உங்களுக்குப் பிடித்தமில்லையோ, அதன் மீது விருப்பம் வரும் வகையில் ஏதேனும் மாற்றம் செய்ய முயலுங்கள். உதாரணமாக உங்களுக்கு கணிணியில் தட்டச்சு செய்வது பிடித்தமில்லையா? கையால் எழுதி அனுப்பலாம், உதவியாளர் அல்லது உங்கள் நண்பரிடம் கொடுத்து தட்டச்சு செய்யச் சொல்லலாம். சமையல் செய்ய விரும்பாதவர்கள் தங்களுக்குப் பிடித்த உணவுவகைகளைச் சமைக்கப் பழகும்பொழுது அப்பணியில் கொஞ்சம் ஆர்வம் அதிகரிக்கும்.

3. உளைச்சலினை உண்டாக்கும் காரணிகளுக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுதல்:
"If you want to change the world, start it from you" என்று கூறுகிறது ஒரு பொன்மொழி. மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம். அவர்கள் அனைவரையும் மாற்ற நம்மால் முடியுமா? அதைப் போலவே, நம்மால் மாற்ற இயலாத எத்தனையோ இருக்கின்றன. அதை உணர்ந்து அதற்கேற்றவாறு வளைந்து கொடுப்பது மிக்க நன்மையைத் தரும்.

ஒரு நிகழ்ச்சியின் எதிர்மறையான விளைவை, ஒரு மனிதரின் தவறுகளை, நிறுவனத்தின் உள்ள கோளாறுகளை - இவற்றை மட்டுமே கவனிப்போமானால் நமக்கு மன அழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். கண்டிப்பாகக் குறையாது. ஒரு முழு வெள்ளைத்தாளில் உள்ள கறுப்புப் புள்ளியின் மீது அதிகம் கவனம் வைப்பது மனித இயல்புதான். ஆனால், நேர்மறைப்பார்வையே மன உளைச்சலைக் குறைக்கவல்லது. அதற்கேற்றவாறு, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

4. உளைச்சலினை உண்டாக்கும் காரணிகளை ஏற்றுக்கொண்டு விடுதல்:
இது இப்படித்தான், இவர்கள் குணம் இவ்வளவுதான் என்பதை ஒப்புக்கொண்டு விடுங்கள். ஒரு அறிஞர் இறைவனிடம் 'என்னால் மாற்ற முடிந்ததை மாற்றும் வலிமையையும், மாற்ற முடியாததை ஒத்துக்கொண்டுவிடும் மனப்பக்குவத்தையும், இரண்டையும் பகுத்துணரும் அறிவையும் கொடு', என்று வேண்டிக்கொள்கிறார். அதேதான் நம் அனைவருக்கும் தேவைப்படுவது. மாற்ற முடியாத ஒன்றைப் பற்றிக் கவலைப்பட்டோ, சினம் கொண்டோ என்ன பயன், நம் உடல் நலம் கெடுகிறது என்பதைத் தவிர?

உங்கள் மனத்தில் உள்ளதை உற்ற ஒருவரிடம், தோழியோ, தாயோ கணவர்/மனைவியோ, நண்பரோ யாராயினும் சரி, அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியானது பகிந்துகொள்ளுகையில் இருமடங்காகிறது, துயரமோ பாதியாகிறது. அதனால்தான், திருடனுக்கும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும் என்ற பழமொழியே தோன்றியது. மனத்தில் அழுத்தி வைத்து மீண்டும் மீண்டும் அசை போடுவோமானால், மிகச்சிறிய பிரச்னை கூட பூதாகாரமாகிவிடுகிறது.

உங்களுக்குக் கெடுதல் செய்தவர்களை மன்னித்துவிடுங்கள். சொல்வது எளிது செய்வது கடினம்தான். ஆனால், உங்கள் எதிரியை நீங்கள் மன்னிக்காத வரையில், அவர்களை உங்கள் முதுகில் சுமந்துகொண்டிருக்கிறீர்கள்' என்ற சீனப் பழமொழியில் பொதிந்திருக்கும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா?

நன்றி: தமிழ்வெப்மீடியா