Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

சிறுகதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

புத்துணர்ச்சி

பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படிஅவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின.

ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு சகோதரங்களுடன் பிறந்த அவள் வீட்டில் மூன்றாவது பிள்ளை. வறுமை தாண்டவமாடினாலும் படிப்பிலே அவளுக்கிணையாக யாருமே இருக்கமுடியாது. அவ்வளவு கெட்டிக்காரி. ஸ்கொலசிப்பில் இலங்கை முழுவதிலும் முதல் மாணவியாகத் தேறிய அவளுக்கு அரசாங்கப் பணம் கிடைத்து வந்தது. எப்பொழுதும் தூய்மையான சீருடை. ஒரே சீருடைதான் இருந்தாலும் சீராக இருக்கும். எண்ணெய் பூசி வாரிவிட்ட நீண்ட கூந்தலை மடித்துக்கட்டியிருப்பாள். யாருடனும் அதிகம் பேசமாட்டாள். மென்மையென்றால் என்னவென்று அவளிடம்தான் அறியவேண்டுமெனப் பலதடவைகள் நினைத்ததுண்டு.
ரீட்டாவின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த துன்பங்களால் அவள் வாழ்க்கை எங்கோ திசைமாறி கடைசியில் இப்படியாகிவிட்டது முதலில் தந்தை அண்ணா,அக்கா தம்பி தங்கை அனைவரும் ஒரே நேரத்தில் குண்டுக்கிரையாகிவிட்டார்கள். தாயாரும் ஒரு தம்பியும் மட்டுமே எஞ்சியிருந்தனர். கவலைகள் கஷ்டங்களால் படுத்த படுக்கையாகி தாயாரும் இறந்துவிட்டார். தம்பியோ இராணுவத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத் துடிதுடித்து இறந்தான். அதன் பின்னும் அவளால் என்ன செய்ய இயலும். இராணுவத்தின் கையிலகப்பட்டு உயிரை மாய்ப்பதிலும் பார்க்க மண் மீட்பிற்காக உயிரை மாய்ப்பதே மேலென எண்ணியதன் விளைவுதான் இது. இவ்வளவு நடந்திருப்பதை இங்கிருந்து அவளுக்காக அவளை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீரை உகுக்கும் அவள் ஆசிரியைக்குத் தொரிந்திருக்க ஞாயமில்லைத் தானே. ஏனெனில் அவள் நீண்ட நாட்களுக்கு முன்பே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் விட்டு ஊர் மாறி வந்துவிட்டாள் அல்லவா.

தொலைபேசி மணி ஒலித்தது. நிஜ உலகிற்கு வந்தாலும் அவள் மனம் அந்தப் பத்திரிகையில் வந்த அந்தப் படத்திலேயே நிலைகொண்டிருந்தது தொலைபேசியில் அவள் தோழி நித்யா தான் அழைத்தாள். அவளுடன் வேலை செய்த சக ஆசிரியைதான் நித்தியா. நித்தியாவே பேச்சை ஆரம்பித்தாள். ரம்யா பத்திரிகை பார்த்தீரா? ஓமப்பா ஒரே குழப்பமாயிருக்கு.. .. எப்படி? எப்படி? அவள் இந்தப் போராட்டத்தில்… என்று இழுத்தாள் ரம்யா. நித்தியா தான் அறிந்தவற்றை விபரமாகக் கூறினாள். பின் தங்கள் வீட்டிலே நேற்று இரவு நடந்த கிறிஸ்மஸ்பாட்டி பற்றிய கதையை சுவாரசியமாக அலசத் தொடங்கினாள்.

மெல்லத் திரைச்சீலையை விலத்திவிட்டு வெளியே பார்த்தாள் ரம்யா. வெளியில் எங்கும் வெண்மையாக இருந்தது. பல வர்ண ஒளி விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன.
நேற்று அவள் தோழியின் வீட்டிலே கிறிஸ்மஸ் பாட்டி நடந்தது. ரம்யாவும் போயிருந்தாள். நித்யா சுத்த இந்து. அவர்கள் யேசு நாதரின் பிறப்பைப்பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரிந்திருப்பார்களா? என்றால்.. இல்லை. எத்தனைவிதமான மதுவகைகள், உணவுப்பண்டங்கள். ஐயோ அந்தப் பெண்களின் உடைகள் பாட்டிக்கென்று புதிதாக விலை உயர்ந்ததாக வாங்கியிருந்தனர் போலும். பாட்டி என்றால் ‘வைன்’ எடுக்கலாம் எடுங்கோ.
அது ஒன்றும் செய்யாது கொஞ்சமாக எடுமப்பா இன்றைக்குக் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருமன் அதுக்கென்ன என்று அவர்கள் வற்புறுத்திய விதம் நினைக்கவே அருவருப்பாக இருந்தது. வைன் கிளாசை ஒரு கையில் வைத்தபடி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு தொடையில் அடித்துப் பலமாக சிரித்துக் கதைக்கும் அந்தப் பெண்களை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள் ரம்யா.

இப்போ ரம்யாவிற்கு அந்தப் பெண்களையும் ரீட்டாவையும் மனம் ஏனோ ஒப்பிடத்தூண்டியது. யேசுநாதரைப்போல அமைதியான ரீட்டா எங்கே இவர்கள் எங்கே. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அவர்கள் தேவாலயம் செல்வதையும் வழிபாடு செய்வதையும் தானே பிரதானமாகக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு நடப்பவைகளைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் குமுறியது.

பாட்டி நடந்து கொண்டிருந்த போது ஒரு பெண் பொங்கல் பண்டிகை பற்றிய கதையை எடுத்தாள். அது என்னப்பா வீக்டேயிஸ்ல எல்லே வருகுது. எப்பிடிக் கொண்டாடுறது. வேலையால் வந்து ஏதும் பொங்கிச் சாப்பிடவேண்டியதுதான். அதற்கு மற்றவள் நானென்டா காலையிலேயே எல்லாம் செய்துபோட்டு பின்னேரம் வந்து சாப்பிடுவன். எனக்கு அம்மா செய்வா என்றது ஒரு குரல். இன்னொரு குரல் மாமி என்றது. அதற்குள் ஒரு குரல் சொன்னது சூரியன் வெளியில வரேக்க எங்கட பிரேக் டைமும் வந்திடும் இதில சூரியப் பொங்கலாம் எப்பிடிச் செய்யிறது. கொல்லென அனைவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி. ஒருவராவது கோவில் பற்றிய கதையைமட்டும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

நினைவுகளில் மூழ்கியவள் காலரவம் கேட்டுத் திரும்பினாள். தன் கணவர் வேலையால் வந்துவிட்டதைக் கண்டதும் தான் நீண்ட நேரமாக நின்றுவிட்டதையுணர்ந்தாள். சோர்வுடன் காணப்பட்ட ரம்யாவை மெல்ல அணைத்தபடியே என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியா இருக்கிறீர்? கண் வேற சிவந்திருக்கு. என மிக அன்பாகவும் ஆதரவாகவும் கேட்டான். ரம்யாவின் கண்கள் மீண்டும் குளமாயின. அன்றைய பத்திரிகையில் இருந்த ரீட்டாவின் படத்தைக் காட்டி இவள் தன் மாணவி என்றும் அவள் பற்றி தானறிந்த விபரங்களையும் கூறினாள்.

இங்கே ரம்யா நீர் உம்மட மாணவி என்ற ஒரே காரணத்திற்காக இப்பிடி அழுகிறீர். உப்பிடி உந்தப் பேப்பர்ல எத்தன போராளியளின்ற படங்கள் வருகுது. அதுகளப் பார்த்து அழுகிறவர்கள் எத்தனை பேர். தங்களின்ற ஆட்கள் என்றவுடன மட்டும் அழுகை வருகுது. போராளிகள் மட்டுமில்ல அங்க கஷ்டப்படுறது. எங்கட அப்பாவிச் சனங்களும் தான். இதெல்லாம் யாருக்கும் தெரியாதென்றில்ல. ஆனா அதைப்பற்றிச் சிந்திக்கிறவை குறைவென்று தான் நான் சொல்லுவன். அதுகள் படுற கஷ்டங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கிறம் அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குமாம் தன்னை மற்றவர்களுக்குத் தெரியாதென்று. அது போலத்தான் எங்கட வாழ்க்கையும். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் எத்தின சனம் சாகுதுகள். சில போராளிகளின்ற படங்களாவது பேப்பரில வருகுது ஆனால் எத்தின சனம் நாளுக்கு நாள் அநாதைகளாக தேடுவாரற்று ஊனின்றி, உடுக்க உடையின்றி, கிழடுகள் வீட்டிலேயே எலும்புக்கூடாகியிருக்குதுகள். ஏதோ தாங்களும் தங்கட முழுக் குடும்பமும் தப்பி வந்திட்டம் என்றதும் எல்லாத்தையும் மறந்து தலைகீழாக நடக்குதுகள். ஏன் நேற்றைக்குப் பாட்டியில பார்த்தீரே. நீரோ நானோ இதுக்குக் கவலைப்பட்டு என்ன பிரயோசனம் இதையெல்லாம் வெளிநாடுகளில வாழுற எங்கட சனங்கள் உணரவேணும் .
மறுநாள் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ரம்யா தான் எடுத்தாள். அது ஒரு ஆங்கிலேயனின் குரல். இங்கிருக்கும் அங்கவீனமான பிள்ளைகளில் ஒருவரையோ இருவரையோ தெரிந்தெடுத்து அவர்களுக்கு ஸ்பொன்சர் செய்யட்டாம் ஆளுக்கு 20டொலர்கள் தானாம். அவர் விபரங்களை நீட்டிக்கொண்டே போனார். ரம்யாவின் மனதிலே ஏதோ சுருக்கென்று தைப்பது போலிருந்தது. என்ன மடம் சொல்கிறீர்கள் என்றார் இறுதியாக. எனது தாய்நாட்டிலே நிறையப் பேருக்கு என் உதவி தேவைப்படுகிறது. என் உறவினர்கள் கூட என்னை எதிர்பார்த்திருக்கையில் நான் என்ன செய்வது? தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினாள் ஒரு விதமான புத்துணர்ச்சியுடன்.

மாலை வீடு வந்த கணவரிடம் தொலைபேசி அழைப்புப் பற்றியும் ஏன் நாங்கள் எங்கள் நாட்டிலுள்ள அகதிகளுக்கு மாதம் 20 டொலர்களை ஒதுக்கக் கூடாது என்று படபடவென்று மூச்சு விடாமல் கதைத்து முடித்தாள். பிறக்கின்ற புத்தாண்டில் அப்படியொரு நல்ல காரியமாவது செய்ய அந்தப் புண்ணியவான்தான் எங்கள் கண்களைத் திறந்துவிட்டார் என்று குறும்புப் பார்வையுடன் தன் மனைவியின் கன்னங்களிலே மெல்லக் கிள்ளினான் பிரசாத். அவர்கள் உள்ளமெல்லாம் ஒருவித புத்துணர்ச்சி பரவத் தொடங்கியது.

முற்றும்.